India vs Pakistan Asia Cup 2025: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஆசியக்கோப்பை 2025, கிரிக்கெட் போட்டி நாளை, அதாவது செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி தான். இப்போட்டி செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் இரு அணிகளும் மோதவுள்ளன.
Add Zee News as a Preferred Source
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நடக்கும் போட்டி என்பதால் இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு இப்போட்டி மீது உள்ளது. அதற்கு ஏற்றார்போல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், இந்தத் தொடரின் மூன்று முறை கூட மோத வாய்ப்புள்ளது, இது ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையும். ஆம், குரூப் போட்டி, சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப்போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஆசிய கோப்பையில் நேருக்கு நேர் இதுவரை
ஆசிய கோப்பையின் வரலாற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை டி20 மற்றும் ஒருநாள் போட்டி வடிவங்களில் சேர்த்து 18 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 10 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது, பாகிஸ்தான் 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மற்ற இரண்டு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டன.
ஒருநாள் போட்டிகள்: ஒருநாள் வடிவத்தில் இரு அணிகளும் 15 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
டி20 போட்டிகள்: டி20 வடிவத்தில், ஆசிய கோப்பையில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா இரண்டு வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது, பாகிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.
டி20 சாதனைகள்
கடந்த ஐந்து ஆண்டுகளில், அதாவது, செப்டம்பர் 2020 முதல் செப்டம்பர் 2025 வரை பார்த்தால், இக்காலகட்டங்களில் நடைபெற்ற டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தானை விட ஒருபடி மேலே உள்ளது. இந்த காலகட்டத்தில் மோதிய ஐந்து போட்டிகளில், இந்தியா 3 வெற்றிகளையும், பாகிஸ்தான் 2 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
இருப்பினும், இந்த புள்ளிவிவரங்களை மட்டும் வைத்து எதிர்வரும் ஆட்டத்தின் முடிவை கணிக்க முடியாது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில், இந்தத் தொடரில் இரு அணிகளிலும் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர், மேலும் டி20 உலகக் கோப்பைக்கான ஒத்திகையாக இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மேலும் சுவாரஸ்யமாக அமைய ஒரு காரணம், சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக கேப்டனாக பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்குவதுதான்.
ஆசிய கோப்பை 2025: அணிகளின் வீரர்கள்
இந்தியா அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
பாகிஸ்தான் அணி:
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சஹிப்சாதா ஃபர்ஹான், சயிம் அயூப், சல்மான் மிர்சா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, சுஃப்யான் மோகிம்.
About the Author
S.Karthikeyan