இந்திய கிரிக்கெட்ட அணி தற்போது இளம் வீரர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் அணியின் கேப்டனாக மட்டும் ரோஹித் சர்மா உள்ளார். 2027 உலக கோப்பை வரை அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அதுவரை அவருக்கு கேப்டன்சி கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டார். இந்நிலையில் ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
Add Zee News as a Preferred Source

பிசிசிஐயின் திட்டம்
2027ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலக கோப்பையை கருத்தில் கொண்டு, ஒரு புதிய தலைமையை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்காக, புதிய கேப்டனுக்கு போதுமான கால அவகாசம் அளிக்கும் நோக்கில் இந்த மாற்றம் முன்கூட்டியே செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மா 2027 உலக கோப்பையின் போது 40 வயதை எட்டுவார் என்பதால், ஒரே ஒரு வடிவ கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி, தனது உடற்தகுதியையும், பார்மையும் தக்கவைத்து கொள்வது கடினம் என கருதி இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் மற்றும் கோலி ஓய்வு பெற்ற நிலையில், அவர்களின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
சுப்மன் கில் தேர்வு?
இந்திய அணியின் அனைத்து பார்மெட்டுகளிலும் எதிர்கால கேப்டனாக சுப்மன் கில்லை பிசிசிஐ கருதுகிறது. ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ஆசிய கோப்பைக்கான டி20 அணியின் துணை கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோரின் பெயர்கள் முன்னதாக பரிசீலிக்கப்பட்டாலும், தற்போது சுப்மன் கில் மட்டுமே இந்த போட்டியில் ஒரே தேர்வாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம், கடந்த காலங்களில் மூன்று வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் என்ற கொள்கையை மீண்டும் பின்பற்ற தயாராகி வருகிறது. அந்த வகையில் சுப்மன் கில் ஒரு நீண்ட கால தேர்வாக கருதப்படுவதாகவும் கூறப்படுகிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, சூர்யகுமார் யாதவிடமிருந்து டி20 கேப்டன் பொறுப்பையும் கில் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மாவின் எதிர்காலம் என்ன?
வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், குறிப்பாக கேப்டனாக கடைசி தொடராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, தனது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த இறுதி முடிவை பிசிசிஐ எடுப்பதை தாமதப்படுத்த முடியும். கடைசியாக ரோஹித் சர்மா இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இருந்தார்.
About the Author
RK Spark