சவுத்தம்டான்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேமி ஸ்மித் – பென் டக்கட் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு ஒரளவு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி 59 ரன்களில் பிரிந்தது. டக்கட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோ ரூட் களமிறங்கினார். ஜோ ரூட் நிதான ஆட்டத்தை கடைபிடிக்க ஜேமி ஸ்மித் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே ஜேமி ஸ்மித் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோ ரூட் உடன் ஜேக்கப் பெத்தேல் கை கோர்த்தார். பெத்தேல் ஆரம்பம் முதலே அடித்து ஆட இங்கிலாந்து அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் அடித்த பிறகு அதிரடியில் பட்டையை கிளப்பிய பெத்தேல் 76 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்த ஜோ ரூட் சதத்தை நோக்கி முன்னேறினார். அதிரடியாக ஆடிய பெத்தேல் 110 ரன்களில் (82 பந்துகள்) அவுட்டானார். இவரின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 400 ரன்களை நோக்கி பயணித்தது.
அடுத்து வந்த கேப்டன் ஹாரி புரூக் 3 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். பின்னர் ஜோ ரூட் உடன் பட்லர் கை கோர்த்தார். பட்லரின் ஒத்துழைப்புடன் சதம் அடித்த ஜோ ரூட் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் பட்லர் மற்றும் வில் ஜாக்ஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களின் அதிரடியால் இங்கிலாந்து 400 ரன்களை கடந்தது.
முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 414 ரன்கள் குவித்துள்ளது. பட்லர் 62 ரன்களுடனும் (32 பந்துகள்), வில் ஜாக்ஸ் 19 ரன்களுடனும் (8 பந்துகள்) களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் மற்றும் கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 415 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.