வாஷிங்டன்,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால், இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா, தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் என தெரிவித்துள்ளது.இந்த நிலையில், இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க மந்திரி ஸ்காட் பெசென்ட் கூறியதாவது:
“அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்கும் நாடுகளுக்கு மேலும் வரிகளை விதித்தால், ரஷிய பொருளாதாரம் சரிந்து விடும். அதிபர் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி. வான்சும், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் உடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
உர்சுலா என்னையும் தொடர்பு கொண்டு, ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்தார். ரஷியாவுக்கு அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு அவசியம்.உக்ரைன் ராணுவம் எவ்வளவு காலம் தாங்கிக் கொள்ளும்? ரஷிய பொருளாதாரம் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? என்ற போட்டிதான் இப்போது உள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் மேலும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். குறிப்பாக, ரஷிய கச்சா எண்ணை வாங்கும் நாடுகள் மீது வரிகள் விதிக்க வேண்டும். அப்படி வரிகள் விதிக்கப்பட்டால், ரஷிய பொருளாதாரம் முற்றிலும் சரிந்து விடும். அதுவே ரஷிய அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும்.” இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க மந்திரி ஸ்காட் பெசென்டின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், தற்போது ரஷியாவிடம் இருந்து இந்தியா மற்றும் சீனாவே அதிகளவில் கச்சா எண்ணை வாங்கி வருகின்றன.ஒருவேளை, அமெரிக்கா மேலும் கூடுதல் வரி விதித்தால், அது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், உக்ரைன் தொடர்பான போர் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையில், நேற்று ரஷியா உக்ரைன் மீது நடத்திய கடும் வான்வழித் தாக்குதல் அமெரிக்காவை மேலும் கோபப்படுத்தியுள்ளது. இதனால், ரஷியாவுக்கு 2-ம் கட்ட பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.