ஒட்டாவா,
அடுத்த ஐ.சி.சி. (2027-ம் ஆண்டு) ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – கனடா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கனடா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலி அபாஸி – யுவராஜ் சம்ரா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை ஸ்காட்லாந்து பவுலர் பிராட்லி க்யூரி வீசினார்.
இன்னிங்சின் முதல் பந்திலேயே அலி அபாஸி கேட்ச் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து பர்காத் சிங் களமிறங்கினார். 2-வது பந்தை எதிர்கொண்ட பர்காத் சிங் அடித்த பந்து பவுலரின் கையில் பட்டு பந்துவீசும் முனையில் இருந்த ஸ்டம்பில் பட்டது. அந்த சமயத்தில் எதிர்புறம் இருந்த மற்றொரு தொடக்க வீரரான யுவராஜ் சம்ரா கிரீசை விட்டு வெளியே இருந்ததால் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார். இதனால் ஆட்டத்தின் முதல் 2 பந்துகளிலேயே கனடா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வெளியேறினர்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் முதல் 2 பந்துகளிலேயே ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும். இப்படி ஒரு விசித்திரமான மோசமான சாதனையை முதல் அணியாக கனடா படைத்துள்ளது.
பின்னர் நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்காட்லாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.