நியூயார்க்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம்நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜானிக் சினெர் (இத்தாலி), ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.43½ கோடி பரிசாக வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் அல்காரஸ், டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறினார். கடந்த 65 வாரங்களாக ‘நம்பர் 1’ ஆக வலம் வந்த சினெரின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டிய அல்காரஸ் 2023-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ‘நம்பர் 1’ இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சினெர் 2-வது இடத்துக்கு சரிந்தார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-வது இடத்தில் நீடிக்கிறார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 3 இடங்கள் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார்.