பாமக பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2024 டிசம்பரில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில், பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் பி.முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார்.

இதற்கு உடனடியாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆட்சேபனை தெரிவித்ததில் இருந்து, தந்தை மகன் இடையே மனக்கசப்பு தொடங்கியது. அதன்பிறகு கடந்த மே மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ், பாமக-வில் குழுக்கள் உருவாகிவிட்டதாக, அன்புமணி மீது மறைமுக தாக்குதலை தொடங்கி, அதன்பின்னர் செயல் தலைவராக அன்புமணியை அறிவித்தும், தலைவராக நானே இருப்பேன், சட்டமன்ற தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே எடுப்பேன் என முடிவெடுத்தார்.

தந்தை ராமதாஸ் என் மீது கோபமாக இருந்தால், அவரிடம் மன்னிப்பு கேட்பதில் தயக்கம் இல்லை என அன்புமணி தெரிவித்தும், சமரசம் செய்யத் தயங்கிய ராமதாஸ், தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என அறிவித்தார்.

இதன்பிறகு ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் என தொடர் அறிவிப்புகள் வந்தன.

கடந்த ஆகஸ்ட் 9-ல் மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நிறுவனர் ராமதாஸ் நியமித்த பொதுச் செயலாளர் முரளி சங்கர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் பொதுச் செயலாளர் முரளி சங்கர் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அவரது கேவியட் மனுக்களை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாநில தலைவர் வி.எஸ்.கோபு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்களில், தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிமை கோரியோ, பாமக அலுவலக முகவரியை நிறுவனர் ராமதாஸுக்கு தெரியாமல் மாற்றியதை போல் மாம்பழம் சின்னத்தை குறுக்கு வழியில் பெறவோ நீதிமன்றத்தை அணுகினால் தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.