Attagasam Rerelease: ருமேனியா விமான டயரில் கோளாறு; உயிர் பயத்தில் படக்குழு; பதறாத அஜித்; சரண் Rewind

அஜித்தின் படங்களில் ரொம்பவும் ஸ்பெஷல் ‘அட்டகாசம்’. இரண்டு விதமான தோற்றங்களில் ஒரு தீபாவளிக்கு ‘இந்த தீபாவளி ‘தல’ தீபாவளி’ என்ற கேப்ஷனுடன் திரைக்கு வந்து வெற்றி கொடியை நாட்டியது.

இயக்குநர் சரண் – இசையமைப்பாளர் பரத்வாஜ் கூட்டணி என்றாலே பாடல்கள் அடிப்பொலிதான். 2004ல் வெளியான இப்படத்தின் பாடல்கள் இன்றும் எவர்கிரின் ஆக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ‘அட்டகாசம்’ விரைவில் ரீரிலீஸ் ஆகிறது.

அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன என்பதால் ‘அட்டகாசம்’ குறித்து இயக்குநர் சரணிடம் கேட்டோம். படம் வெளியாகி 20 வருடங்களைத் தாண்டினாலும் விஷயங்களைக் கொஞ்சமும் மறக்காமல் பல சுவாரஸ்சியங்களை இங்கே பகிர்கிறார் சரண்.

இயக்குநர் சரண்
இயக்குநர் சரண்

”நானும் அஜித்தும் இணைந்த படங்கள் எல்லாமே பெரியளவுல திட்டமிடல் எதுவும் இல்லாமல், எதார்த்தமாகவே ஆரம்பிச்சது தான். அப்படித்தான் இந்த ‘அட்டகாச’மும். ‘தீனா’, ‘ரெட்டைஜடை வயசு’ படங்களைத் தயாரித்த கார்த்திகேயன் சார், அவங்க அப்பா பழனிசாமி சார்கிட்ட அஜித் சாரோட கால்ஷீட் இருந்தது.

அந்தச் சமயம் அஜித், ‘ஜி’ படத்துல நடிச்சிட்டிருந்தார். இந்தத் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கஷ்டத்துல இருந்ததால அவங்களுக்கு ஒரு படம் செய்து கொடுக்க விரும்பினார். இந்தப் படத்தை நான் இயக்கினால் சரியாக இருக்கும்னு தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள். அப்படித்தான் ‘அட்டகாசம்’ தொடங்கினது.

அட்டகாசம் படப்பிடிப்பில்..
அட்டகாசம் படப்பிடிப்பில்..

இந்தப் படத்தின் கதை ஆரம்பத்தில் ‘வட இந்தியாவில் நடக்கற ஒரு கதை’யாகதான் அமைச்சிருந்தேன். இந்தப் படத்துக்கு முன்னர் அதாவது 2001ல நானும் அஜித்தும் சேர்ந்து ‘ஏறுமுகம்’னு ஒரு படம் தொடங்கினோம். ஒரு பாடலும் படமாக்கினோம். ஆனா, சில சூழல்களால அது மேற்கொண்டு தொடராமல் அப்படியே டிராப் ஆகிடுச்சு.

அந்த ‘ஏறுமுகம்’ல அஜித்திற்கு வட சென்னைக்காரர் கெட்டப் ஒண்ணு வச்சிருந்தோம். அதுல அஜித் தன் கழுத்து நிறைய செயின் போட்டுகிட்டு அதுல ‘6’னு ஒரு டாலர் வச்சிருப்பார். வேட்டி, சட்டை, லுக் எல்லாமே அவரது கெட்டப்பை ரசிச்சு ரசிச்சு வடிவமைச்சது அஜித் தான்.

இயக்குநர் சரண்.
இயக்குநர் சரண்.

அந்த ‘ஏறுமுக’ கெட்டப்பை மனசுல வச்சு, மும்பையில் நடக்கற கதையை சென்னையில் நடக்கற கதையாகவும், அஜித்தை தூத்துக்குடி குருவாக (தல) மாத்தினோம். படப்பிடிப்பையும் சென்னையில்தான் நடத்தினோம். டிரைவிங் ஸ்கூல், தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷன் எனச் சகலத்தையும் சாந்தோம் பகுதியில்தான் செட் போட்டு படமாக்கினோம்.

இந்தப் படத்துக்கு முன்னர் நான் ‘ஜேஜே’ படத்தின் வேலைகளும் போய்க்கிட்டிருந்தது. ‘ஜேஜே’யில் எனக்கு ஹீரோயின் பூஜாவைச் சிபாரிசு செய்தது ஷாலுதான் (ஷாலினி அஜித்). அதனால பூஜாவை இதிலும் கமிட் செய்தோம். என்னொட முந்தைய படங்கள்ல ஒரே ஹீரோயின் இரண்டு படங்கள்ல நடிச்சது கிடையாது.

‘ஏறுமுகம்’ல படமாக்கின பாட்டை இதுல பயன்படுத்தலாம்னு நினைத்தோம். ஆனா, தூத்துக்குடி குரு தோற்றமும், ‘ஏறுமுகம்’ லுக்கும் வேறவேற என்பதால், அதற்குப் பதிலாக ‘தெற்குச் சீமையில என்னைப் பத்தி கேளு…’ பாடலைக் கொண்டு வந்தோம். இன்னொரு கெட்டப் ஜீவாவும் புத்திசாலியான கேரக்டர் என்பதால் அந்தக் கெட்டப்பும் பேசப்பட்டது. ‘தலை போல வருமா’ வரியை நான் எழுதினேன். மற்ற வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.

ஏறுமுகம் அஜித்
ஏறுமுகம் அஜித்

படத்துல மறக்க முடியாத விஷயம் ஒண்ணு. ருமேனியாவில் ரெண்டு பாடல்களைப் படமாக்கினோம். 8 நாட்கள் திட்டமிட்டு, ஒரு நாள் முன்னதாகவே எடுத்து முடித்துவிட்டோம். படம் தீபாவளி வெளியீடு என அறிவித்துவிட்டதால், உடனே சென்னைக்கு வந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைத் தொடங்குங்க வேண்டிய சூழல். அதனால என்னையும் கல்யாண் மாஸ்டரையும் அஜித் அவரோட காசுல துபாய் வழியாக சென்னை வரும் விமானத்துல பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்து அனுப்பி வச்சிட்டார்.

ஆனா அஜித்துக்கும் ஷாலினி உள்பட அவருடன் இருக்கும் 20 பேர்கள் கொண்ட டீமுக்கும் நேரடி விமானம் கிடையாது. அடுத்த நாள் அவங்க மிலன், இத்தாலி வழியாக சென்னைக்குச் செல்லும் விமானத்தில்தான் வந்தாக வேண்டும். ஆனா, மிலன் நகரில் நிகழ்ந்த ஒரு போராட்டத்துல எதிர்பாரா வகையில் விமானச் சேவையை நிறுத்தி வச்சிட்டாங்க. அதனால ஒருநாள் தள்ளி தான் மிலன் நகருக்குப் போக நேர்ந்தது. அங்கே தான் அதிர்ச்சியான ஒரு விஷயம் நடந்தது.

விமானம் இறங்க தயாரான போது டயர் ஒன்று வேலை செய்யவில்லை. அஜித் அமர்ந்திருந்த சீட்டின் அருகே வந்த பைலட், அஜித்திடம் அவரது சீட்டின் கீழே உள்ள விமானத்தின் டயர் சரியாக வேலை செய்யவில்லை… என்று சொல்லிக்கொண்டே சீட்டின் கீழே இருந்த கதவைத் திறந்து அந்தச் சக்கரத்தை ரிப்பேர் செய்ய முயன்றார்.

விமானத்தில் இப்படி ஒரு கோளாறு என்றதும் யூனிட்டில் உள்ள அத்தனைப் பேரும் பதறிவிட்டார்கள். அதைப் போல அந்த விமானத்தின் கதவு சரியாக மூடவில்லை என்று, கடப்பாறை கொண்டு நெம்பி சாத்தியிருக்கிறார்கள். அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் எனக் கருத வெளியே ஆம்புலன்ஸ் முதற்கொண்டு ரெடியாக நிற்கிறது. கடைசி நேரத்தில் தான் அதிர்ஷ்டவசமாக டயர் சரியாகி லேண்ட் ஆகியிருக்கிறது.

ஜீவா கெட்டப்
ஜீவா கெட்டப்

அதைப் போல மிலன் நகரில் உள்ள ஸ்டிரைக்கால், விமானம் புறப்பட முடியாத சூழல். இதனால மிலனின் ஏர்ப்போர்ட்டிற்குள்ளேயே அத்தனைப் பேரும் வெளியேற முடியற முடியாமல் 5 நாட்கள் தவிர்த்திருக்கிறார்கள். விசா இல்லாததால் ஏர்போர்ட்டை விட்டு வெளியேவும் செல்ல முடியாத சூழல்.

நகரத்திற்குள்ளும் செல்ல முடியாது. யார் கையிலும் பணம் கிடையாது. செல்போன் பரவலாக இல்லாத சூழல். அஜித் அப்போது செல்போன் வைத்திருந்தார். அவரது போன் மூலமாக அத்தனைப் பேரும் தங்கள் வீடுகளுக்கு போன் செய்து பத்திரமாக இருப்பதை உறுதி செய்தார்கள். அது சர்வதேச கால்.

தவிர, ஐந்து நாட்களிலும் அத்தனைப் பேரும் சென்னை திரும்பு வரை அவர்களை உணவளித்ததுடன், பத்திரமாகக் கூட்டி வந்தார் அஜித். சென்னையில் இருந்த எனக்கு இது எதுவும் பின்னர்தான் தெரிய வந்தது. யூனிட்டினர் என்னிடம், ‘இவ்வளவு நடந்தும் அஜித் அசரவில்லை. ரொம்பவே தைரியமாக இருந்தார்’ என்று அவர்கள் என்னிடம் சொன்னது இப்போதும் நினைவில் இருக்கிறது” என்கிறார் சரண்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.