ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ்… பாக்., போட்டியில் இருந்து நீக்கமா? இந்திய பிளேயிங் XI பெரிய சிக்கல்!

Asia Cup 2025, India vs Pakistan: ஆசிய கோப்பை 2025 தொடர் கடந்த செப். 9ஆம் தேதி தொடங்கியது. டி20ஐ வடிவில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெற உள்ளன. குரூப் சுற்று, சூப்பர் 4 சுற்றுக்கு பின் இறுதிப்போட்டி வரும் செப். 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

Add Zee News as a Preferred Source

Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடரில் இதுவரை… 

வரும் செப். 9ஆம் தேதி ஆப்கானிஸ்தான் – ஹாங் காங் அணிகள் மோதின. அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடந்த இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதுவும் 93 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. இன்று வங்கதேசம் – ஹாங் காங் அணிகள் மோதுகின்றன.

Asia Cup 2025: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி 

இது ஒருபுறம் இருக்க, பலரும் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி வரும் செப். 14ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. பகல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பின் நடைபெறும் முதல் இந்தியா – பாகிஸ்தான் போட்டியாகும். இந்த போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்ற கேள்வி அனைவரிடத்திலும் நிலவி வந்தது. ஆனால், போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை, திட்டமிடப்படி போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

India vs Pakistan: எதிர்பார்ப்பே இல்லையா?

இருப்பினும், துபாயில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு இன்னும் டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகவில்லை என்ற தகவலும் கிடைக்கிறது. போட்டி நடக்குமா நடக்காதா என்ற குழப்பமே டிக்கெட் விற்பனை சுணக்கம் காட்ட முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தானை விட இந்தியா அதிக பலத்துடன் காணப்படுவதாலும் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்புகள் குறைந்துவிட்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

India vs Pakistan: நெருக்கடி கொடுக்குமா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் அதன் முதல் போட்டியை ஓமனுக்கு எதிரான நாளை விளையாட உள்ளது. சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் யூஏஇ அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரை பாகிஸ்தான் வென்றிருந்தது. இருப்பினும் அதில் ஆப்கானிஸ்தான் கடுமையாக போட்டியளித்தது. இந்தியாவும் தொடர்ச்சியாக வெற்றியை குவித்து வருவதால், பாகிஸ்தான் கொஞ்சமாவது இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

India vs Pakistan: 4 ஸ்பின்னர்கள், 3 பாஸ்ட் பௌலர்கள்

ஆனால் இவை அனைத்தையும் விட இந்திய அணி அடுத்த போட்டியில் இதே பிளேயிங் லெவன் உடன் செல்லுமா அல்லது மாற்றம் செய்யுமா என்ற கேள்விதான் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. காரணம், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்பதாலும், அது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் இந்தியா நேற்று 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது எனலாம். அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோருடன் களமிறங்கியது. ஒரே ஒரு பிரீமியம் வேகப்பந்துவீச்சாளராக பும்ரா மட்டும் விளையாடினார். அர்ஷ்தீப் சிங் இடம்பெறவில்லை. ஹர்திக் மற்றும் தூபே வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டாக களமிறங்கினர்.

India vs Pakistan: அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா?

இந்நிலையில், பாகிஸ்தான் போட்டியிலும் இந்தியா இதே பார்மட்டில் இறங்கினால் சிக்கல் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். புதிய பந்தில் பந்துவீசவும், இடதுகை வேகப்பந்து ஆப்ஷனை கொடுக்கவும் அர்ஷ்தீப் சிங் நிச்சயம் தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படி, பும்ரா உடன் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டால் யாரை இந்திய அணி நீக்கும் என்பதும் பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்திய அணி நம்பர் 8 வரை பேட்டர்கள் தேவை என்ற பார்முலாவில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதால் ஹர்திக் – தூபே – அக்சர் ஆகியோர் நீடிப்பார்கள் எனலாம்.

India vs Pakistan: குல்தீப் யாதவ் நீக்கப்படுவாரா? 

அதேநேரத்தில், வருண் சக்ரவர்த்தி மிஸ்ட்ரி ஸ்பின்னர் ஆவார். அவரை நீக்கவும் வாய்ப்பில்லை. எனவே, அர்ஷ்தீப் சிங்கை சேர்க்க வேண்டும் என்றால் குல்தீப் யாதவ் மீதுதான் கைவைக்க வேண்டும். ஆனால் அவர்தான் ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக 4 விக்கெட்டை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, குல்தீப்பை நீக்குவதும் கடினம் என்பதால் இந்த ஆசிய கோப்பையில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவதில் சிக்கல் எனலாம். பாகிஸ்தானுக்கு எதிராக பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. 

ஆனால், டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி இந்த காம்பினேஷனை சீர் செய்ய வேண்டும், இந்த காம்பினேஷன் அனைத்து இடங்களிலும் சரிவராது. பும்ரா இல்லாதபோது அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

About the Author


Sudharsan G

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.