புதுடெல்லி,
டெல்லியை சேர்ந்தவர் பிரதீப் என்ற வாலிபர், மானி பவார் (வயது 29) என்கிற தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக புதிய காரை முன்பதிவு செய்திருந்தார். அதனை எடுத்துச் செல்ல அவர்கள் பிரீத் விகாரில் உள்ள ஷோரூமுக்கு சென்றனர். கூடவே, பூசாரியையும் அழைத்துச் சென்றனர்.
பூசாரி, “இன்று நாள் நன்றாக இல்லை, இன்னொரு நாளில் காரை எடுக்கலாம்” என சொல்லி இருக்கிறார். ஆனால் மானி பவாரோ, “இல்லை, இன்றுதான் பிறந்தநாள். எனவே இன்றே எடுத்தாக வேண்டும்’ என அடம்பிடித்து கணவரை அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்கள் ‘புக்’ செய்திருந்த கார், ஷோரூமின் முதல் மாடியில் வெளியே சாலையை பார்த்து நின்று கொண்டிருந்தது. முன்பக்கம் கண்ணாடிச்சுவர் இருந்தது. காரை எடுப்பதற்கு முன்பு நல்ல சகுனத்துக்காக காரின் டயரில் எலுமிச்சைப் பழத்தை வைத்து நசுக்க பூசாரி சொன்னார்.
இந்த கார் தன் மனைவிக்கான பரிசு என்பதால் பிரதீப், மனைவியையே காரை எடுக்கச் சொன்னார். அதன்பேரில் மானி பவார் டிரைவர் இருக்கையில் இருந்து காரை இயக்கினார். பிரதீப்பும், கார் விற்பனையாளர் விகாசும் உடன் இருந்தனர். இவர்கள் வாங்கிய அந்த கார், ‘ஆட்டோமெட்டிக்’ கார் ஆகும். இந்த வகையான கார்களை ஓட்டியதில் மானி பவாருக்கு அனுபவம் இல்லை.
அவர் லேசாக காரை முன்னால் நகர்த்துவதற்கு பதில், ‘ஆக்சிலேட்டரை’ வேகமாக அழுத்தி மிதித்து விட்டார். அவ்வளவுதான், அடுத்த நொடி கார் குதிரைப் பாய்ச்சலில் ஷோரூமின் கண்ணாடிச்சுவரை உடைத்து வெளியே பறந்தது. பின்னர் மேலே இருந்து தலைகுப்புற கீழே விழுந்து மல்லாக்க கரப்பான் பூச்சி போல கவிழ்ந்தது.
யாரும் எதிர்பாராத இந்த விபத்து, அந்த பகுதியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். காரில் சிக்கி இருந்த 3 பேரையும் வெளியே மீட்டனர். இதில் மானி பவார் காயம் அடைந்திருந்தார். பிரதீப்பும், விற்பனையாளரும் காயமின்றி தப்பினர். மானி பவார் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்தில் காரும், பூசாரியின் மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தன. அந்த மோட்டார் சைக்கிள் மீதுதான் கார் விழுந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இல்லை. இதனால் பெரிய அளவில் இழப்புகள் தவிர்க்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசில் யாரும் புகார் செய்யவில்லை என்றாலும், இது வித்தியாசமான ஒரு விபத்தாகி ஊருக்கே அம்பலமாகி விட்டதால் போலீசார் இதில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர்.