பெங்களுரு,
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வசிக்கும் தம்பதிக்கு 16 வயதில் மகள் இருக்கிறாள். இந்த சிறுமியின் அக்கா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இதையடுத்து, அக்கா வீட்டுக்கு சிறுமி சென்றிருந்தாள். அங்கிருந்து நேற்றுமுன்தினம் இரவு தனியார் பஸ்சில் பெங்களூருவுக்கு சிறுமி புறப்பட்டு வந்தாள். ஐதராபாத்தில் இருந்து சிறுமியை, அவரது அக்கா பஸ்சில் ஏற்றி விட்டு இருந்தார். இதனால் சிறுமி மட்டும் ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக அந்த பஸ்சில் பயணம் செய்தாள். அந்த பஸ்சில் ஒருவர் டிரைவராகவும், மற்றொருவர் கிளீனர் மற்றும் பகுதி நேர டிரைவராகவும் இருந்துள்ளனர்.
சிறுமி தனியாக வந்ததை அறிந்துகொண்ட கிளீனர் ஜன்னலில் உள்ள துணியை மூடும் போது சிறுமியின் உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி செல்போனில் பெங்களூருவில் வசிக்கும் தாயிடம் சிறுமி கூறினாள். அதன்பிறகு, செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதையடுத்து, பஸ்சை ஓட்டி வந்த டிரைவரிடம் செல்போனை சார்ஜ் போடுவதற்காக சிறுமி கொடுத்தாள்.
அதன்படி, டிரைவரும் சார்ஜ் போட்டுள்ளார். சார்ஜ் ஆனதும் செல்போனை எடுக்க சிறுமி சென்றாள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த கிளீனர், செல்போன் வேண்டும் என்றால், தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று பல முறை கூறி கட்டாயப்படுத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின்னர் டிரைவரிடம் இருந்து செல்போனை வாங்கி சென்ற சிறுமி, நடந்த சம்பவங்கள் குறித்து தன்னுடைய அண்ணனிடம் செல்போனில் தகவல் தெரிவித்தாள். உடனே சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் பெங்களூரு சாளுக்கிய சர்க்கிளுக்கு திரண்டு வந்தனர். அங்கு தனியார் பஸ் வந்ததும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் நடுரோட்டில் வைத்து அவரின் ஆடைகளை கிழித்து எறிந்து அரை நிர்வாணப்படுத்தினர்.
அதன்பிறகு, பொதுமக்கள் முன்னிலையில் சிறுமியின் குடும்பத்தினர்- உறவினர்கள் கிளீனருக்கு தர்ம-அடி கொடுத்தார்கள். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விதானசவுதா போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கிளீனரை கைது செய்து விசாரித்தனர். அவர் பெயர் ஆரிப் கான் என்று தெரிந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.
இந்த சம்பவத்தின் போது டிரைவர் அமைதியாக இருந்ததாகவும், அவர் பஸ் ஓட்டியதால் எதுவும் தெரியவில்லை என்றும், அவர் தான் தனது தங்கையின் செல்போனை சார்ஜ் போட்டு கொடுத்ததாகவும் சிறுமியின் அண்ணன் தெரிவித்தார்.