அனைவரும் அதிகம் எதிர்பார்த்த ஆசிய கோப்பை தொடர் தற்போது தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி UAE அணியுடன் விளையாடியது. அதில் முதலில் பேட்டிங் செய்த UAE அணி 13 ஓவரில் 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 எண்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது.
Add Zee News as a Preferred Source
வழக்கமாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே அனைவருக்கும் ஒரு விறுவிறுப்பு இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே இல்லை. இன்னும் துபாயில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளுக்கான டிக்கெட்கள் விற்பனை ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் மற்ற அணிகளை ஒப்பிடும்போது இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. ஆசியக் கோப்பையில் உள்ள ஏழு அணிகளில் எந்த ஒரு அணியும் இந்தியாவை தோற்கடிக்கும் அளவிற்கு பலமானதாக இல்லை.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி
ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. சஞ்சு சாம்சன் விளையாடுவாரா? அல்லது ஜித்தேஷ் சர்மா விளையாடுவாரா? என்ற குழப்பமும் நீடித்தது. இந்நிலையில் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடினார். அவருக்கு பேட்டிங் கிடைக்கவில்லை என்றாலும் அவரது பெயர் மிடில் ஆர்டரில் தான் இருந்தது. மேலும் பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் என மூன்று ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது.
அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் இல்லை
இந்தியாவின் முக்கியமான டி20 பௌலராக இருக்கும் அர்ஷ்தீப் சிங் முதல் போட்டியில் விளையாடவில்லை. டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த அணியில் அர்ஷ்தீப் சிங் முக்கியமான வீரராக இருந்தார். குறிப்பாக இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி இருந்தார் அர்ஷ்தீப் சிங். இருப்பினும் அவருக்கு முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணி 8 பேட்ஸ்மேன்னுடன் களமிறங்கியதால் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?
UAE அணிக்கு எதிராக எளிமையான முறையில் வெற்றி பெற்றாலும் ஒரு டார்கெட்டை செட் செய்து எதிரணியை கட்டுப்படுத்த டெத் ஓவர்களில் நல்ல பவுலர்கள் தேவை. தற்போது பும்ரா மட்டுமே சிறந்த பவுலராக உள்ளார். ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தாலும் டெத் ஓவர்களில் எந்த அளவிற்கு அவர் பந்து வீசுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் அர்ஷ்தீப் சிங் போன்ற ஒருவர் டெத் ஓவர்களில் இந்திய அணிக்கு தேவை என்ற குரல் எழுந்துள்ளது.
முதல் போட்டியில் சிவம் துபே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திருந்தாலும் அவரை அணியிலிருந்து நீக்கி விட்டு கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை அணியில் எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்த காம்பினேஷனை மாற்றுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
About the Author
RK Spark