காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி

கின்சாஹா,

வடமேற்கு காங்கோவில் இந்த வாரம் நிகழ்ந்த இருவேறு படகு விபத்து சம்பவங்களில் சுமார் 193 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈக்குவேட்டர்(Equateur) மாகாணத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலையில் இந்த 2 படகு விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.

முன்னதாக கடந்த புதன்கிழமை, ஆற்றில் சென்று கொண்டிருந்த மோட்டார் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காணாமல் போனதாக தகவல் வெளியானது. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை எதையும் அரசு வெளியிடவில்லை.

தொடர்ந்து வியாழக்கிழமை லுகோலேலா பகுதியில் காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்த படகு, எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து, பின்னர் நீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தை தொடர்ந்து மீட்புப் படையினர் விரைந்து சென்று 209 பேரை பத்திரமாக மீட்டனர்.

இந்த 2 படகு விபத்து சம்பவங்களிலும் மொத்தம் 193 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்றும், முழு விவரங்களை அரசு வெளியிடவில்லை என்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அங்கு சாலை வழி பயணங்களை விட படகு பயணங்கள் மலிவானதாக இருப்பதால், ஏராளமானோர் படகுகளில் பயணிக்கின்றனர். ஆனால் படகுகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பதாலும், அதிக எடை ஏற்றப்படுவதாலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.