India vs Pakistan Playing XI Prediction: ஆசிய கோப்பை தொடர் 2025 கடந்த செப். 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த தொடர் பெரியளவில் கவனம் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.
Add Zee News as a Preferred Source
ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 8 அணிகள் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவிலும்; இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. அனைத்து அணிகளும் முதல் போட்டியை விளையாடிவிட்டன. ஹாங் காங், வங்கதேசம் மட்டும் 2 போட்டிகள் விளையாடிவிட்டன.
IND vs PAK: இந்தியா vs பாகிஸ்தான்
ஏ பிரிவில் அனைத்து அணிகளும் தலா 1 போட்டியை விளையாடி இருக்கின்றன. இந்தியா பெரிய வெற்றியை பெற்று அதிக நெட் ரன்ரேட் உடன் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானும் ஒரு வெற்றியுடன் 2வது இடத்தில் உள்ளது. அந்த வகையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நாளை (செப். 14) துபாயில் மோத இருக்கின்றன. இந்த போட்டிதான் ஆசிய கோப்பை தொடரையே சூடுபிடிக்க வைக்கும் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு இன்று இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இந்திய அணி நாளைய போட்டியில் பிளேயிங் லெவனை எப்படி அமைக்கும் என்பது குறித்த ஒரு பார்வை தெரியவந்தது. அதாவது, பாகிஸ்தான் போட்டியில் பிளேயிங் லெவனை மாற்ற வாய்ப்பில்லை என அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
IND vs PAK: ஆடுகளம் மாறிவிட்டது
“மாற்றங்களை செய்ய விரும்பவில்லை. நாங்கள் இங்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரை விளையாடியபோது இருந்தது போல் இல்லாமல், தற்போது ஆடுகளம் முற்றிலும் மாறிவிட்டது. இருப்பினும் நாங்கள் முதல் போட்டியில் அமைத்த பிளேயிங் லெவன்தான் சரியான அமைப்பாக தெரிகிறது. வெவ்வேறு பேட்டிங் ஆர்டர்களில் விளையாடக்கூடிய எங்கள் வீரர்களை நாங்கள் பணயம் வைக்க மாட்டோம் என்பதே முக்கிய கொள்கை” என்றும் அவர் தெரிவித்தார்.
IND vs PAK: பிளேயிங் லெவனில் மாற்றமில்லை
இதன்மூலம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அதே பிளேயிங் லெவனோடுதான் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்த முறையும் வாய்ப்பு கிடைக்காது. சஞ்சு சாம்சன் தொடர்ந்து அணியில் இடம்பிடிப்பார், அவர் மிடில் ஆர்டரில்தான் தொடர்வார். கில் மற்றும் அபிஷேக் ஓபனிங் வருவார்கள்.
ஷிவம் தூபே, குல்தீப் யாதவிற்கும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம், இந்திய அணி நம்பர் 8 வரை பேட்டிங் செய்ய வீரர்கள் வேண்டும் என எதிர்பார்க்கிறது. எனவேதான் ஹர்திக், அக்சர், தூபே என மூன்று ஆல்-ரவுண்டர்களுடன் களமிறங்குகிறது.
IND vs PAK: அர்ஷ்தீப் வர வாய்ப்பே இல்லையா?
அர்ஷ்தீப்பை உள்ளே கொண்டுவந்தால் ஒன்று தூபேவை தூக்க வேண்டும், ஆனால் பேட்டிங் வரிசை குறைந்துவிடும். இல்லையெனில் குல்தீப்பை நீக்க வேண்டும், அப்படிச் செய்தால் சுழற்பந்துவீச்சு திறன் குறைந்துவிடும். எனவே, அர்ஷ்தீப்பை வெளியே அமரவைப்பதே சரி என்ற முடிவுக்கு இந்தியா வந்துவிட்டது. அடுத்தடுத்த போட்டிகளில் பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் நேரத்தில் அர்ஷ்தீப்பிற்கு அணியில் இடம் கிடைக்கலாம். இந்தியாவை போலவே, பாகிஸ்தானும் ஓமன் அணியுடனான அதன் பிளேயிங் லெவன் உடன் களமிறங்கும் என கூறப்படுகிறது.
IND vs PAK: நேரலையில் எப்படி பார்க்கலாம்?
இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி நாளை (செப். 13) இரவு 8 மணிக்கு தொடங்கும். டாஸ் இரவு 7.30 மணிக்கு நடைபெறும். துபாயில் நடைபெறும் இந்த போட்டியை Sony Sports சேனலிலும், SonyLiv ஓடிடி தளத்திலும் நேரலையில் காணலாம்.
IND vs PAK: பிளேயிங் லெவன் கணிப்பு
இந்திய அணி: சுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
பாகிஸ்தான் அணி: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், சல்மான் அலி அகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.