லக்னோ,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில், பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான இன்றைய ஆட்டம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி, உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த விஷ்வ இந்து ரக்ஷா பரிஷத் என்ற அமைப்பினர் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தியுள்ளனர்.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் கோபால் ராய் கூறுகையில், “எப்போதும் போல் இந்த முறையும் இந்தியா வெற்றி பெறும். பஹல்காமில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்காக நமது பிரதமர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடி கொடுத்தார். இந்த போட்டி நடைபெறக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பாகிஸ்தானை நம்மால் எளிதில் வீழ்த்த முடியும் என்பதை உலகிற்கு காட்ட இது நமக்கு சிறந்த வாய்ப்பு. நமது இந்திய வீரர்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு” என்று தெரிவித்தார்.