டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நரிட்டா விமான நிலையத்தில் இருந்து பிலிப்பைன்சுக்கு போயிங் 737-800 என்ற விமானம் புறப்பட்டது. யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 8 பணியாளர்கள் உள்பட 140 பேர் பயணித்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் இருந்து லேசான புகை வெளியேறியது. தீப்பிடிக்கும் அபாயம் இருந்ததால் விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி அந்த விமானம் ஒசாகாவில் உள்ள கன்சாய் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அங்கு தயாராக இருந்த மீட்பு படையினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனவே விமான நிலையத்திலேயே அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் விமானம் தீப்பிடித்ததற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.