புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி ஆட்சியமைக்க பாஜகவினருடன் மத்திய அமைச்சர், புதுச்சேரியில் இன்று ஆலோசனையில் நடத்தினர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் செயல்படுவது பற்றி முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. நாளை பாஜக மாநில பொதுக்குழு கூடுகிறது.

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநில சிந்தனை அமர்வு கூட்டம் ஹோட்டல் அண்ணாமலையில் மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய தொழில் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மாநில மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, உள்துறை அமைச்சர் நமசிவாயம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதி, அமைச்சர் ஜான்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்படுவது, தேசிய ஜனநாயக கூட்டணியை எவ்வாறு வலுப்படுத்துவது, பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை அனைத்து கிளைகளிலும் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து நிர்வாகிகள் மத்தியில் கலந்த ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சாய் சரவணன் குமார், கல்யாண சுந்தரம், ரிச்சர்ட், தீப்பாய்ந்தான் உட்பட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது, ”வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் என்.ஆர்.காங்., பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுகிறது. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெல்வது தொடர்பாக ஆலோசனை நடந்தது. முக்கியமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தவும் ஆலோசனைகள் தரப்பட்டன.

இதனிடையே, நாளை பழைய துறைமுக வளாகத்தில் பாஜக மாநில பொதுக்குழு கூடுகிறது. இதில் தேர்தல் பொறுப்பாளர்களாக உள்ள இரண்டு மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து மேலிடத்தில் இருவரும் தெரிவிப்பார்கள். அதன்படி தேர்தல் வியூகம் வகுத்து செயல்படுத்தப்படும்” என்று பாஜக நிர்வாகிகள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.