காசா,
பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில், காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. காசா நகரத்தின் மீது, நேற்று நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று தரை வழி தாக்குதலை தொடங்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகளை அழிப்பதற்காக, காசா மீதான ராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, இஸ்ரேலின் செய்தித்தொடர்பாளர் அவிசாய் அட்ரீ கூறுகையில், இன்று காலை முதல் காசா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, காசா மீதான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும் அங்குள்ள மக்கள் வெளியேற வேண்டுமெனவும், கடந்த ஒரு மாதமாகவே இஸ்ரேல் அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், காசாவின் தெற்கு பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை அதிகரித்துள்ளதால், வடக்கு காசா மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.