சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி – என்ன செய்யப் போகிறது அதிமுக?

அதிமுகவில் 2016-இல் ஜெயலலிதா இறந்தவுடன் வெடித்த மோதல்கள் இன்னும் ஓயவில்லை. அடித்துப் பிடித்து ஒருவழியாக பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் முழுமையாக ரூட் கிளியராகவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், இபிஎஸ்சை செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன், சசிகலா என பலமுனைகளில் இருந்தும் சுற்றி வளைத்திருக்கிறார்கள். அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்?

2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆட்சியை மீண்டும் பிடித்துவிடுவோம் என்று உறுதியோடு நிற்கிறது திமுக. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இடியாப்ப சிக்கல் இன்னும் தீரவில்லை. மிஞ்சியும், கெஞ்சியும் பார்த்தும் மீண்டும் அதிமுகவில் அடைக்கலம் கிடைக்காத விரக்தியோடு, பாஜகவும் பாதகம் செய்துவிட்ட வருத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ். அதேபோல, எங்களுக்கு துரோகம் செய்த இபிஎஸ் இருக்கும் பக்கம் தப்பித் தவறியும் இருக்க மாட்டோம் என சபதம் போட்டு கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார் டிடிவி தினகரன்.

இந்த சூழலில்தான், எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனும், தன் பங்குக்கு நெருக்கடியை ஆரம்பித்துள்ளார். பிரிந்து சென்ற எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோஷத்தை வலுவாக முன்வைக்கிறார் அவர். வழக்கம்போல சசிகலாவும், அதிமுகவை நிச்சயமாக ஒன்றிணைப்பேன் என்று அதே பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும், அதிகாரபூர்வமாக இப்போது அதிமுகவை கையில் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பும் கிடையாது, சமாதானமும் கிடையாது என பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டார். ‘ஆட்சியை கவிழ்க்க முயன்ற துரோகிகளுக்கு கட்சியில் மீண்டும் இடமில்லை. ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம்’ என்று பஞ்ச் அடித்து பதற வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலா? – எடப்பாடி பழனிசாமி இப்போது ஒரு கணக்கில் இருக்கிறார். அதாவது, 2024 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 23 சதவீத வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 18 சதவீத வாக்குகளும் கிடைத்தது. இதனை கூட்டினால் 41 சதவீதம் வருகிறது. அதாவது, திமுக கூட்டணி பெற்ற 46 சதவீத வாக்குகளுக்கு பக்கத்தில் இது வருகிறது. எனவே, தற்போதைய ஆட்சிக்கு எதிரான மனநிலையும், தனது சுற்றுப் பயணத்தில் கிடைத்த எழுச்சியையும் வைத்து எப்படியும் ‘அடுத்த முதல்வர் நான்தான்’ என்று முடிவே செய்துவிட்டார் இபிஎஸ்.

ஆனால், இபிஎஸ் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார். அதாவது, 2024-இல் அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ இருந்தது. அவர்கள் இப்போது இல்லை. அதேபோல பாஜக கூட்டணியில் இருந்த பாமக, ஓபிஎஸ், தினகரன் இப்போது அவர்களோடு இல்லை. எனவே, இந்த வகையில் பார்த்தாலே 7 முதல் 10 சதவீத வாக்குகள் குறையும். அதேபோல, 2024-ல் பாஜக கூட்டணியில் இல்லாததால் கணிசமான சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்தன. 2026-ல் அது நிச்சயம் கிடைக்காது. எனவே அந்த வகையில் ஒரு சரிவு இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இதனால், வெற்றி உறுதி என்ற நிலையில் எல்லாம் அதிமுக – பாஜக கூட்டணி இல்லை. உறுதியான கூட்டணியோடு, தெளிவான வியூகத்தோடு இறங்கினால் மட்டுமே அதிமுகவால், திமுக கூட்டணியை பலத்தோடு எதிர்க்கவே முடியும். ஆனால், அதிமுகவிலும் சரி, அதன் கூட்டணியிலும் சரி, இலையுதிர் காலம் போல எல்லோரும் உதிர்ந்து கொண்டுள்ளார்கள்.

இருப்பினும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், உடும்பு பிடியாக நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தலில் சில நூறு வாக்குகள் கூட பெரும் மாற்றத்தை உருவாக்கும். கடந்த 2021 தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி – தோல்வி மிகக் குறைவான வாக்குகளில் மாறிப்போனது. எனவே, சிறிய கட்சியை இழப்பதுகூட கூட்டணி பெரும் சரிவை உருவாக்கும் என்கின்றனர் அரசியல் வியூகவாதிகள்.

சுற்றி வளைக்கப்படும் இபிஎஸ்: – எடப்பாடி பழனிசாமியும், அவருக்கு எதிராக நிற்பவர்களும் ஒன்றிணைவது கிட்டத்திட்ட இனி சாத்தியமில்லை. ஆனால், இதனால் இழப்பு என்பது இபிஎஸ்சுக்குத்தான் ஏற்படும். ஏனென்றால், அவர்தான் பிரதான எதிர்க்கட்சி தலைவர், வலுவான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால் முதல்வராகப் போவது இபிஎஸ்தான்… ஓபிஎஸ்சோ, தினகரனோ, சசிகலாவோ அல்லது செங்கோட்டையனோ அல்ல.

எனவே, அனைவரையும் அனுசரித்து செல்லவேண்டியது எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமானது. ஒருவேளை ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கட்சியில் இணைக்காவிட்டாலும், வேறு வழிமுறைகளின்படி கூட்டணியில் சேர்க்கலாம். தினகரனையும் கூட்டணிக்குள் தக்க வைக்கலாம். இன்னொரு பக்கம் தேமுதிகவும், அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளது; அவர்களை சமாதானம் செய்து உள்ளே கொண்டுவரலாம். ஆனால், எல்லாவற்றையும் ‘மேலே இருப்பவன் பாத்துப்பான்’ என்ற மனநிலையில் இருந்தால், ஒருவேளை நாளை ஆட்சி கிடைத்தாலும், அதனையும் ‘மேலே இருப்பவர்களே’ பார்த்துக்கொள்வார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் சிவசேனா நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுவிடும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

உட்கட்சி குழப்பங்கள் ஒருபக்கம் இருக்க, அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது தவெக. நிச்சயமாக திமுகவுக்கு எதிரான வாக்குகளில் கணிசமான வாக்குகளையும், பொதுமக்களின் கணிசமான வாக்குகளும் இம்முறை விஜய்க்கு கிடைக்கும். அது நிச்சயம் அதிமுக வாக்கு வங்கிக்கு பாதகத்தை உருவாக்கும். அதுபோல டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அதிமுக பழைய வலிமையோடு இல்லை. அங்கே ஓபிஎஸ், தினகரன் ஃபேக்டர் சொல்லிக் கொள்ளும்படியான பாதிப்பை உருவாக்கும்.

எப்படி பார்த்தாலும், உட்கட்சி பிரச்சினைகள், விஜய்யின் அரசியல் வருகை ஆகியன இபிஎஸ்சுக்கு பெரும் சவாலாக மாறியிருப்பது உண்மை. அதிமுக இந்த நெருக்கடிகளில் இருந்து எப்படி மீளும் எனப் பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.