திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 24- ந் தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமய பவனில் காவல் துறை, திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தலைமை தாங்கி பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, வாகன நிறுத்தம், கூட்ட நெரிசல் மேலாண்மை போன்ற அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை வழங்கினார்.
மேலும் பிரம்மோற்சவ காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து திட்டங்கள் வகுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதன்பிறகு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரம்மோற்சவ விழா நேரத்தில் பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் 435 முறை பஸ்கள் இயக்கப்படும். அதன் மூலம் தினமும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்களை திருமலைக்கு அழைத்து வந்து விடப்பட்டு, மீண்டும் திருப்பதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
திருப்பதியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த 23 வாகன நிறுத்துமிடங்கள் தயாராக உள்ளன. கோவிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 1 லட்சத்து 85 ஆயிரம் பக்தர்கள் முதல் 2 லட்சம் பக்தர்கள் வரை அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தச் சிரமமும் இன்றி வாகனச் சேவைகளை பார்க்கலாம்.
4 ஆயிரத்து 200 போலீசார், 1,500 தேவஸ்தான பறக்கும்படை ஊழியர்கள் பக்தர்களுக்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். காவல் கட்டுப்பாட்டு மையம் மூலம் கூட்ட நெரிசல், முக்கிய இடங்களை நேரடியாக கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்-மந்திரி, அரசியல் பிரமுகர்கள், சட்டத்துறை அதிகாரிகள், வி.ஐ.பி.க்கள் வருகை, புறப்படும் நேரம் தரிசன திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.