போபால்,
பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சி சார்பில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். இதன்பின்னர் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய வேண்டுமென்றால், ஆத்மநிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) என்பதே அதற்கான வழியாகும்.
இது பண்டிகைக்களுக்கான காலம் ஆகும். நீங்கள், உள்நாட்டு பொருட்கள் என்ற மந்திரத்திற்கு தொடர்ந்து, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 140 கோடி இந்தியர்களிடமும் நான் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும்.
நீங்கள் வாங்க கூடிய எந்தவொரு பொருளும், அதன் உற்பத்திக்கான பின்னணியில் இந்தியர் ஒருவரின் வியர்வை இருக்க வேண்டும். அதில், இந்திய மண்ணின் மணம் வீச வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதம் உருவாவதற்கு, 2047-ம் ஆண்டு வரை உங்களுடைய உதவி எனக்கு தேவை என பேசியுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நாம் வாங்கும்போது, நம்முடைய பணம் நாட்டுக்குள்ளேயே இருக்கும். அந்த பணம் சாலைகள், பள்ளிகள் மற்றும் முதன்மை சுகாதார நல மையங்களை அமைப்பதற்கு பயன்படும். ஏழைகள் மற்றும் விதவை தாயார்களுக்கும் அது உதவும் என்று பேசியுள்ளார்.