பிரேசிலியா,
தென் அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து காணப்படுகிறது. உலக நாடுகளில் உள்ள மொத்த காடுகளையும் சேர்த்தாலும் அவற்றையெல்லாம் விட அமேசான் காடுகளின் பரப்பளவு அதிகம். இங்குள்ள மரங்களில் இருந்து ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி டன் ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது.
இதனால்தான் ‘பூமியின் நுரையீரல்’ ‘புவியின் சுவாசம்’ என அமேசான் காடுகள் கொண்டாடப்படுகிறது. இந்த காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன. 16 ஆயிரம் வகையான உயிரினங்கள் வசிக்கின்றன. பல பழங்குடி இனத்தவர்களுக்கும் புகலிடமாக உள்ளது.
பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா, ஈகுவடார் ஆகிய 9 நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கிறது அமேசான் காடுகள். இந்த காடுகள் தற்போது உலகமயமாக்கல் மற்றும் மனித பேராசை காரணமாக அழிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.
இதனை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். லண்டனை தலைமையிடமாக கொண்டு குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் உலக அளவில் செயல்பட்டு வருகிறது. மனித-இயற்கை இடர்பாடுகள், சுரண்டல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. தற்போது பகீர் அறிக்கை ஒன்றை இது வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை (2024), 12 ஆண்டுகளில் அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பிரேசிலில் 365 பேர், கொலம்பியாவில் 250 பேர், பெருவில் 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் (2024) மட்டும் 124 பேர் இறந்துள்ளதாகவும், ஆண்டுதோறும் இந்த பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.