ஆசிய கோப்பை 2025 தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. குரூப் A மற்றும் Bயில் இருந்து 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மிகவும் முக்கியமான மற்றும் பரபரப்பான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால், சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெரும், அதே சமயம் பங்களாதேஷ் அணி வெளியேறும். இலங்கை அணி வெற்றி பெற்றால், பங்களாதேஷ் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெரும், ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறும். இதனால் இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
Add Zee News as a Preferred Source
ஆப்கானிஸ்தான் தோல்வி!
நேற்று நடைபெற்ற இந்த முக்கிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மேலும் பங்களாதேஷ் அணியும் தகுதி பெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில், குசல் மெண்டிஸின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி இந்த வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது மட்டுமல்லாமல், வங்கதேச அணியையும் அடுத்த சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளது. இந்தியா, இலங்கை அணிக்கு அடுத்து வலுவான அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நபியின் ஆட்டம் வீண்!
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி திணறியது. குறிப்பாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷாரா, தனது மிரட்டலான பந்துவீச்சால் பவர்பிளேக்குள்ளேயே 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. ஆனால் முகமது நபி யாரும் எதிர்பார்க்காத விதமாக ஆட்டத்தை மாற்றினார். கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட நபி, வெறும் 22 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 என்ற நிலைக்கு கொண்டு சென்றார்.
குசல் மெண்டிஸின் ஆட்டம்
170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு, குசல் மெண்டிஸின் சிறப்பான ஆட்டம் கைகொடுத்தது. ஒருபுறம் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், குசல் மெண்டிஸ் நிதானமான மற்றும் நேர்த்தியான ஆட்டத்தால் ரன் ரேட் குறையாமல் பார்த்து கொண்டார். 52 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 171 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குசல் மெண்டிஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்த வெற்றியின் மூலம், குரூப் B பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் A பிரிவில் இருந்து ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
About the Author
RK Spark