India vs Pakistan T20 Matches: ஆசிய கோப்பை தொடரில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தும். இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றுப் போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளுக்கு இடையிலான டி20 சர்வதேசப் போட்டிகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய விவரங்கள் இங்கு பார்க்கலாம். இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டிகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
Add Zee News as a Preferred Source
இந்தியா, பாகிஸ்தான் இதுவரை
2007 முதல் இதுவரை இரு அணிகளும் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒரு போட்டியில் பவுல்-அவுட் முறையில் இந்தியா வென்றது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையில் 2024 டி20 உலகக் கோப்பையில் நடந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி ஆவார். அவர் 11 இன்னிங்ஸ்களில் 492 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 70.28 ஆகும். அவரது அதிகபட்ச ஸ்கோர், 2022 டி20 உலகக் கோப்பையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 82* ரன்கள் ஆகும்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்திய அணிக்கு எதிராக முகமது ரிஸ்வான் 5 இன்னிங்ஸ்களில் 228 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் ஹர்திக் பாண்டியா ஆவார். அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 13.57 மற்றும் எக்கானமி 7.75 ஆகும். பாண்டியா 2016 ஆசிய கோப்பையில் 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து தனது சிறந்த பந்துவீச்சு சாதனையை பதிவு செய்தார். உமர் குல் (பாகிஸ்தான்) மற்றும் புவனேஷ்வர் குமார் (இந்தியா) இருவரும் தலா 11 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
ஆசிய கோப்பை போட்டி
இந்த ஆசியகோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை இந்திய அணியை அபாரமாக வீழ்த்தியது. அத்துடன், பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்கவும் மறுத்தது. பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய அணி இப்படி நடந்து கொண்டதை கேப்டன் சூர்யகுமார் வெளிப்படையாக சொன்னார். இதற்கு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் இந்தியாவில் இந்திய அணிக்கு பெரும் ஆதரவே இருந்தது. இந்த சூழலில் தான் இரு அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது போட்டி நடக்க உள்ளது.