Shreyas Iyer : நட்சத்திர பிளேயரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடர்ச்சியாக விளையாட இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் சிறிது காலமாகவே அதிருப்தியில் இருக்கும் அவர், இப்போது எடுத்திருக்கும் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த அவர், இரண்டாவது போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு அப்போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். கடைசி நேரத்தில் அவர் எடுத்த இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணம் என்று இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Add Zee News as a Preferred Source
ஸ்ரேயாஸ் ஐயர் திடீர் முடிவு ஏன்?
அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, ஸ்ரேயாஸ் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டியில் இந்திய ‘ஏ’ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். ஆனால், இரண்டாவது போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் திடீரென கேப்டன் பதவியில் இருந்தும், அணியில் இருந்தும் விலகினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமைத் தேர்வாளர் அஜித்கர்வாருடன் பேசிவிட்டு, பிசிசிஐ-க்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க விரும்புவதாகவும், அதற்கு ‘தனிப்பட்ட’ காரணம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, துருவ் ஜூரெல் இப்போட்டிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் அறிக்கையின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் மும்பைக்குத் திரும்பியுள்ளார். அதேநேரத்தில் இன்னொரு தகவலின்படி, அவர் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஷ்ரேயாஸ் ஐயரின் சமீபத்திய பார்ம்
ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 8 மற்றும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனாலும், இந்திய ‘ஏ’ அணி அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் 532 ரன்களுக்குப் பதிலாக, இந்திய ‘ஏ’ அணி 531 ரன்கள் எடுத்தது.
ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும், 2025 ஆசிய கோப்பைக்கான டி20 அணியிலும் இடம்பெறவில்லை. அவர் தற்போது, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முக்கியமான வீரராக நிலைநிறுத்த கடினமாக உழைத்து வருகிறார். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல அவர் முக்கியப் பங்கு வகித்தார். இருந்தபோதும் அவருக்கு டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை.
இந்திய அணி அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கான அணி விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த முடிவு, அணியின் தேர்வு மற்றும் எதிர்கால திட்டமிடலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
S.Karthikeyan