இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் அரசு பொருளாதார நெருக்கடியால் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், நாட்டின் மின்சாரத்துறையில் அதிகரித்து வரும் கடன் சுமையை நிவர்த்தி செய்வதற்காக, 18 வங்கிகளின் கூட்டமைப்புடன் ரூ.1.2 லட்சம் கோடி நிதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் அரசு கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது அதிகரித்து வரும் கடன் நெருக்கடியைச் சமாளிப்பதில் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கடன் சுமார் ரூ.2.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதம் ஆகும்.
பாகிஸ்தான் அரசு மற்றும் வங்கிகளின் கூட்டமைப்பு இடையிலான இந்த ஒப்பந்தம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று கையெழுத்தானது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஐ.நா. சபையின் 80-வது அமர்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள நிலையில், காணொளி காட்சி மூலம் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஷெபாஸ் ஷெரீப், அதிகரித்து வரும் கடன் சுமையை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இந்த ஒப்பந்தம் ஒரு “குறிப்பிடத்தக்க மைல்கல்” என்று குறிப்பிட்டார். மேலும் கடன் சுமையை கட்டுப்படுத்தும் பாகிஸ்தான் அரசின் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியம்(IMF) பாராட்டியதாக அவர் கூறினார்.
மேலும், அடுத்த கட்டமாக மின்சார விநியோக நிறுவனங்களை (DISCOs) தனியார்மயமாக்குதல், வரி இழப்புகளின் சவாலை சமாளித்தல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக குறிப்பிட்ட அவர், அதிகாரிகள் அரசு மீது நம்பிக்கை வைத்து உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.