மைசூரு,
மைசூருவில் தசரா விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் வருகிற 2-ந்தேதி நடக்க உள்ளது. இதையொட்டி மைசூரு பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் 1-ந்தேதியும், 2-ந்தேதியும் டிரோன் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
அதாவது, டிரோன்களை பறக்கவிட்டு அதில் உள்ள மின்விளக்கு மூலம் பல்வேறு வடிவங்கள் உருவாக்கப்படும். இதனை காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த டிரோன் சாகச நிகழ்ச்சியையொட்டி நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாளும் (திங்கட்கிழமை) டிரோன் சாகச ஒத்திகை நடக்க உள்ளது.
இதனால் நாளை, நாளை மறுநாள் மற்றும் 1, 2-ந்தேதி என 4 நாட்கள் மைசூரு நகரில் தனியார் டிரோன்கள் பறக்க தடை விதித்து செஸ்காம் (சாமுண்டீஸ்வரி மின்வாரியம்) உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை மீறி தனிநபர்கள் யாராவது டிரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செஸ்காம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனெனில் தசரா விழாவை பார்க்க வரும் இன்ஸ்டாகிராம், யூ-டியூப் பிரபலங்கள் பலர் மைசூரு நகரை டிரோன் மூலம் படம் பிடித்து வருகிறார்கள். இதனால், மேற்கண்ட 4 நாட்கள் தனியார் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.