Asia Cup Final 2025: ஆசிய கோப்பை 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. செப். 9ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை நாளையுடன் (செப். 28) நிறைவுபெறுகிறது.
Add Zee News as a Preferred Source
டி20ஐ வடிவில் நடைபெற்ற இந்த தொடர் மொத்தம் 8 அணிகள் இருப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன; ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் வெளியேறின. பி பிரிவில் இருந்து இலங்கை, வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குச் சென்றன, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் வெளியேறின.
Asia Cup Final 2025: பரபரப்பான சூழலில் நடைபெறும் இறுதிப்போட்டி
சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளையும் வென்று இறுதிப்போட்டிக்குச் சென்றது. பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்து மற்ற 2 அணிகளையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்தது. வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் வெளியேறிவிட்டன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு மோதுகின்றன.
நடப்பு ஆசிய கோப்பை தொடரிலேயே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 2 முறை மோதி உள்ளன. இரண்டு முறையும் இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்து, இரண்டிலும் எவ்வித அழுத்தமும் இன்றி எளிமையாக வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில், தொடர்ச்சியாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையாக மீண்டும் ஒருமுறை பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் இந்த தொடரில் மிக சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தாலும் டி20 போட்டிகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.
India vs Pakistan Final: இந்த 3 வீரர்கள் மிக முக்கியம்
அந்த வகையில், இந்திய அணிக்கு முன்னர் விளையாடிய 2 போட்டிகளை போல் எளிமையாக இருக்காது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் காயத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களில் யார் யார் விளையாடப்போகிறார்கள் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. அப்படியிருக்க நாளைய இறுதிப்போட்டியில் இந்திய அணியின் இந்த 3 வீரர்கள்தான் அணியின் வெற்றிக்கு முக்கியமானவர்களாக இருப்பார்கள். அந்த 3 பேர் சிறப்பாக விளையாடாவிட்டால் இந்திய அணி தோல்வியடையும் வாய்ப்பு அதிகமாகிவிடும். அந்த 3 பேர் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
India vs Pakistan Final: சஞ்சு சாம்சன்
ஓபனிங்கில் விளையாடி வந்த சாம்சன் இந்த தொடரில் புதிய ஸ்பாட்டில் நம்பர் 5 வீரராக களமிறங்குகிறார். அதுவும் இலங்கை அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை விளையாடியதன் மூலம் அவரது தன்னம்பிக்கையும் அதிகமாகியிருக்கும். இந்திய அணியின் மிடில் ஆர்டர் ரன் அடித்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய ஸ்கோரை எட்ட முடியும். சேஸிங் செய்வது ஒருபுறம் என்றால், பாகிஸ்தானை கட்டுப்படுத்தக் கூடிய இலக்கை நிர்ணயிக்க வேண்டியதும் மிடில் ஆர்டரின் கடமையாக உள்ளது. அதனால், சஞ்சு சாம்சன் நாளைய போட்டியில் பெரியளவில் ரன்களை குவிக்க வேண்டும்.
India vs Pakistan Final: சூர்யகுமார் யாதவ்
கேப்டன் சூர்யகுமார் கடந்த சில தொடர்களாகவே தொடர்ச்சியான பங்களிப்பை அளிப்பதில்லை. அவருக்கு இயல்பான ஷாட்களையே அவரால் அடிக்கவில்லை என்பதுதான் சிக்கல். வழக்கத்திற்கு மாறான வீரராக அறியப்பட்ட சூர்யகுமார் தற்போது அந்த ஷாட்களை அடிக்க முடியாமல் திணறுவது பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. டாப் ஆர்டரில் ஒருவேளை, அபிஷேக், சுப்மான் சொதப்பினால் ரன் அடிக்க வேண்டிய கட்டாயம் இவருக்கே இருக்கிறது. சூர்யாவும் தொடர்ந்து சொதப்பினால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துவிடும்.
India vs Pakistan Final: வருண் சக்ரவர்த்தி
நாளையே போட்டியில் பும்ரா கண்டிப்பாக விளையாடுவார். ஆனால், அர்ஷ்தீப் சிங் விளையாடுவது சந்தேகம்தான். இந்திய அணி ஒரு ஆல்-ரவுண்டரை விட்டுக்கொடுத்தால் மட்டுமே அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியும். அர்ஷ்தீப் இல்லாமல் பும்ரா மட்டுமே விளையாடுகிறார் என்றால் பும்ரா பவர்பிளேவிலேயே 3 ஓவர்களை வீச அதிக வாய்ப்புள்ளது. ஹர்திக் 1, அக்சர் 1, பும்ரா 3, வருண் 1 என்ற காம்பினேஷனிலேயே பவர்பிளேவில் இந்திய அணி பந்துவீசி வருகிறது.
இதில் ஹர்திக் 2 ஓவர்கள் கூட வீசலாம். அதே நேரத்தில் வருண் சக்ரவர்த்தியை பவர்பிளேவில் வீச வைப்பார்கள், அவர்கள் இலங்கை போட்டியில் பவர்பிளேவில் வீசவில்லை. வருண் சக்ரவர்த்தி நாளை பவர்பிளேவில் வீசினாலும் சரி, வீசாவிட்டாலும் சரி கட்டுகோப்பாக ரன்களை கொடுத்து 2-3 மிடில் ஆர்டர் விக்கெட்டை தூக்கிவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி உறுதி.