அனைவரும் எதிர்பார்த்த ஆசிய கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் இந்திய அணி அதற்கு தயாராகி வரும் நிலையில், இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின் போது முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் கேட்ச் பிடிக்க முயன்று திலக் வர்மாவும் காயமடைந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டிக்கு முன்னதாக, இவர்களின் காயம் குறித்த முக்கிய தகவலை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மார்னி மோர்கெல் தெரிவித்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
போட்டியில் நடந்தது என்ன?
இலங்கைக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் பேட்டிங்கில் 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அதிரடி காட்டிய தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா, பீல்டிங்கின் போது 10வது ஓவரில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதே போல், போட்டியின் முதல் ஓவரை வீசி, விக்கெட்டையும் கைப்பற்றிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அந்த ஓவர் முடிந்த உடனேயே, தசை பிடிப்பு காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்பு, மீண்டும் பீல்டிங் செய்ய திரும்பவில்லை. கடைசி கட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்று திலக் வர்மாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இறுதி போட்டியில் இவர்கள் விளையாடுவார்களா என்ற கவலை இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மோர்கெல் விளக்கம்
இந்த காயம் குறித்து பேசிய மார்னி மோர்கெல், “இருவருமே ஆட்டத்தின் போது தசை பிடிப்பால் அவதிப்பட்டனர். அபிஷேக் ஷர்மா நலமாக இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் நிலை இன்று இரவும், நாளை காலையும் தெரிந்துவிடும். அதன்பிறகு, இறுதி போட்டியில் அவர் விளையாடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனால், இருவரும் ஆட்டத்தின் போது தசை பிடிப்பால் மட்டுமே பாதிக்கப்பட்டனர், வேறு பெரிய காயம் எதுவும் இல்லை” என்று மோர்கெல் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த போட்டி, எங்கள் அணிக்கு ஒரு நல்ல எச்சரிக்கை மணியாக அமைந்ததாக தெரிவித்தார். “இந்த தொடரில், நாங்கள் இன்னும் ஒரு முழுமையான, நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒவ்வொரு போட்டிக்கு பிறகும், நாங்கள் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் குறித்து விவாதிக்கிறோம். கடினமான சூழல்களில் ஸ்டிரைக்கை மாற்றுவது, விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவது மற்றும் பார்ட்னர்ஷிப்களைப் பாதுகாப்பது, முதல் 10 ஓவர்களில் துல்லியமாகவும், சரியான லெந்திலும் பந்துவீசுவது மற்றும் யார்க்கர் போன்ற பந்துகளை சமயோசிதமாக பயன்படுத்துவது, மின் விளக்குகளின் கீழ் கேட்ச் பிடிப்பதில் உள்ள பிரச்சினை போன்றவை உள்ளன. நாங்கள் இன்னும் முழுமையடையவில்லை, அது எங்களுக்குத் தெரியும்,” என்று தெரிவித்துள்ளார்.
About the Author
RK Spark