ஆமதாபாத்,
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
ஆசிய கோப்பை முடிந்த அடுத்த 4 நாட்களில் இந்திய வீரர்கள் இந்த தொடரில் களம் காணுகிறார்கள். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த ஜூன், ஜூலையில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் 4 சதம் உள்பட 754 ரன்கள் குவித்து வியப்பூட்டினார். ரவீந்திர ஜடேஜா, லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிம் அந்த தொடரில் கலக்கினர். தற்போது உள்ளூர் சூழலில் ஆடுவதால் இந்தியாவின் கை இன்னும் வலுவாக ஓங்கி நிற்கும். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாமல் 2011-ம் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டில் இந்தியா விளையாடப்போகும் முதல் டெஸ்ட் இதுவாகும். அதனால் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்ட சுழல் ஜாலங்கள் மீது கவனம் திரும்பி இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் முழுமையாக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதலாவது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 9 டெஸ்ட் தொடரை வரிசையாக கைப்பற்றி இருக்கும் இந்திய அணி, அந்த ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்புடன் காத்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இரு மாதங்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் உதை வாங்கியது. இதில் ஒரு இன்னிங்சில் வெறும் 27 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றது.
இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி கண்டு 23 ஆண்டுகள் ஆகி விட்டது. கடைசியாக 2002-ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது. இதே போல் இந்திய மண்ணில் எடுத்துக் கொண்டால், அந்த அணி டெஸ்டில் வென்று 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கு தொடரை கைப்பற்றி 42 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்படி எல்லாமே வெஸ்ட் இண்டீசுக்கு எதிர்மறையான சாதனைகள் தெரிந்தாலும் கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தி வரலாறு படைத்ததை உத்வேகமாக எடுத்துக் கொண்டு சாதிக்க முயற்சிப்போம் என வெஸ்ட் இண்டீசின் பயிற்சியாளர் டேரன் சேமி கூறியுள்ளார். ஆடுகளம் சுழலுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால், அந்த அணி ஜோமல் வாரிகன், கேரி பியார் ஆகியோரை தான் மலைபோல் நம்பி உள்ளது. பேட்டிங்கில் தேஜ்நரின் சந்தர்பால், பிரன்டன் கிங், ஷாய் ஹோப், அலிக் அதானேஸ் உள்ளிட்டோர் கணிசமாக ரன் எடுத்தால் சவால் அளிக்கலாம்.
இவ்விரு அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 100 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 23-ல் இந்தியாவும், 30-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. 47 போட்டி ‘டிரா ’ ஆனது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 46.67 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள இந்தியா தற்போதைய தொடரில் முழுமையாக வென்று புள்ளி எண்ணிக்கையை உயர்த்தும் நோக்குடன் தயாராகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, முகமது சிராஜ், பும்ரா அல்லது பிரசித் கிருஷ்ணா.
வெஸ்ட் இண்டீஸ்: தேஜ்நரின் சந்தர்பால், ஜான் கேம்ப்பெல் அல்லது கெவ்லோன் ஆண்டர்சன், அலிக் அதானேஸ், பிரன்டன் கிங், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிகன், கேரி பியார், ஜோகன் லெய்ன் அல்லது ஆண்டர்சன் பிலிப்ஸ்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.