புதுடெல்லி,
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். ரஷிய எண்ணெய்யை கொள்முதல் செய்து வருவதற்காக, இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு என்ற நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ள சூழலில், புதினின் இந்திய வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, இரு நாட்டு தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பு பற்றி முதன்முறையாக தோவல் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அப்போது சந்திப்புக்கான தேதி பற்றி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், புதினின் இந்திய வருகைக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு ஆகஸ்டு மாத இறுதியில் தொடங்கியது. செப்டம்பர் 1-ந்தேதியும் தொடர்ந்தது. இந்த 2 நாள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் இருதரப்பு சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அப்போது, புதின் தன்னுடைய ஆடம்பர மற்றும் அதிக பாதுகாப்பு கொண்ட லிமோசின் ரக காரில் வரும்படி கூறி பிரதமர் மோடியை அழைத்து சென்றார். இருவரும் காரில் ரிட்ஜ்-கார்ல்டன் ஓட்டலுக்கு சென்றனர். அதற்கு முன், பிரதமர் மோடி வருவதற்காக 10 நிமிடங்கள் வரை புதின் காத்திருந்தபடியே காணப்பட்டார். அவர் வந்ததும் இருவரும் ஒரே காரில் ஒன்றாக சென்றனர். அப்போது பல்வேறு விசயங்களை பற்றி அவர்கள் உரையாடினர். கார் ஓட்டலை அடைந்த பின்னரும், அவர்கள் இருவரும் 45 நிமிடங்கள் காரில் அமர்ந்து பேசியபடி இருந்தனர். அது ஆழ்ந்த அறிவு சார்ந்த ஒன்றாக இருந்தது என பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார்.
இதன்பின்னர் நடந்த இருதரப்பு சந்திப்பில் இருவரும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்பு, புதினுடன் காரில் பயணித்த புகைப்படம் ஒன்றை பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்தியாவும் ரஷியாவும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் நீண்டகால தொடர்பில் உள்ளவை. இரு நாடுகளும் பல ஆண்டுகளாக பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி உள்ளதுடன், இருதரப்பு வர்த்தகமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சமடைந்து உள்ளது.
இந்தியாவுக்கான ஆயுத விநியோகத்திற்கான முக்கிய நாடுகளில் ஒன்றாக ரஷியா உள்ளது. உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் போர் தொடங்கியதில் இருந்து, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.