மதுரா,
உத்தர பிரதேசத்தின் மதுரா நகரின் கோவிந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரேந்திரா குமார். இவருக்கு திருமணம் முடிந்து மம்தா ராகவ் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஹரேந்திராவுக்கு எதிராக 2018-ம் ஆண்டு பரபரப்பு புகார் ஒன்றை கூறினார்.
அதில், அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பல லட்சம் பணமும் மோசடி செய்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு இருந்தது.
ஹாலந்து நாட்டை சேர்ந்த அவர், 2009-ம் ஆண்டு ஆன்மீக காரணங்களுக்காக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருடன், வளர்ப்பு சகோதரரான சரப்ஜித் மங்கு சிங் என்பவரும் வந்துள்ளார். அப்போது, ஹரேந்திராவுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியதுடன், உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று ஐரோப்பிய பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதற்கேற்ப, வீட்டில் திருமண சடங்குகளை அவர் நடத்தியதுடன், பணம் மற்றும் ஏ.டி.எம். பரிவர்த்தனைகள் வழியாக பெண்ணின் 1 லட்சம் யூரோ (ரூ.1.04 கோடி) மதிப்பிலான தொகையையும் எடுத்து கொண்டார். அதற்காக போலியான முதலீட்டு ஆவணங்களை அந்த பெண்ணிடம் காண்பித்து உள்ளார்.
இதன்பின்னரே, ஹரேந்திராவுக்கு முன்பே திருமணம் நடந்திருப்பதும், அவருடைய மோசடி செயல்களுக்கு அவருடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருந்ததும் அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் போலீசுக்கு சென்றார்.
இந்த வழக்கு கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி சுஷில் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அவர், ஹரேந்திராவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ஹரேந்திராவின் தாயார் லீலா தேவிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். அதனுடன், இருவருக்கும் முறையே ரூ.7.9 லட்சம் மற்றும் ரூ.5.9 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.