இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து மூன்றாவது நாளாக நடந்த வன்முறை போராட்டங்களின்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் 12 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால், அங்குள்ள சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டன, அத்துடன் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
அப்போது நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டங்கள், கடந்த 72 மணி நேரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கி உள்ளன. கடந்த வாரம் கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.