கரூர் துயரச் சம்பவம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 12 கேள்விகள்

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 12 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்? விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் சிலர் கூறினர். இவற்றைத் தாண்டி கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்ன?

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள், வேங்கைவயல் விவகாரம், மெரினா விமான சாகச நிகழ்வில் கூட்ட நெரிசல் மரணங்கள், 25 லாக்-அப் மரணங்கள் போன்றவற்றுக்கு எல்லாம் செல்லாத முதல்வர் ஸ்டாலின், கரூரில் மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவது ஏன்?

திமுகவினரின் உணர்ச்சிப்பூர்வ நாடகத்தால் சந்தேகமடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். கூட்ட நெரிசலுக்குப் பிறகு, உண்மையை மறைக்க திமுக அரசு இவ்வளவு அசாதாரண அவசரத்துடன் செயல் பட்டது ஏன்? அவதூறு பரப்பியதாக 25 பேர் மீது வழக்கு பதிந்து, பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் உட்பட 4 பேரைக் கைது செய்து, மக்கள் மத்தியில் எழும் அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏன் இவ்வளவு விரைவாகத் திமுக அரசு முடக்குகிறது?

10,000 பேர்தான் கூடுவர் என்று தவறாக கணித்ததாக விஜய் மீது குற்றம்சாட்டும் திமுக அரசின் காவல்துறை, கூட்டத்தைச் சரியாக மதிப்பிடாதது ஏன்? விஜய் தாமதமாக வருவதனால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?

அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய திமுக அரசு, கரூர் வழக்கை ஒப்படைக்கத் தயங்குவது ஏன்? என்பது உள்ளிட்ட 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், திமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த பேரிடரே இத்துயரம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாகத் தெரிவதாகவும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

பாஜக பிடியில் விஜய் உள்ளாரா? – இதற்கிடையே, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறும்போது, ‘‘கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி கொண்டிருக்கும்போது, சட்டப்பேரவை உறுப்பினர், அரசு அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுவது சரியானது அல்ல.

ஏற்கெனவே, பாஜகவை விமர்சித்துதான் விஜய் பேசிக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது பாஜகவின் பிடியில் விஜய் எப்படி இருக்க முடியும்? திருவண்ணாமலையில், இளம்பெண்ணை காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து கேட்கிறீர்கள். காவல்துறை காமுகர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.