IPL 2026 Mini Auction, Pathum Nissanka: ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனையொட்டி வரும் டிசம்பர் மாதத்திற்குள் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும், 10 ஐபிஎல் அணிகளின் முகாமும் பரபரப்பான சூழலில் இருக்கும்.
Add Zee News as a Preferred Source
IPL 2026 Mini Auction: கவனிக்கப்படும் முக்கிய வீரர்கள்
ஒரு ஐபிஎல் அணியில் அதிகபட்சம் 25 வீரர்கள் இருக்கலாம். அதில் அதிகபட்சம் 8 வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். கடந்த மெகா ஏலத்தில் ஒரு அணிக்கு மொத்தம் ரூ.120 கோடி பர்ஸ் தொகையாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த மினி ஏலத்தில் பர்ஸ் தொகை ரூ.125 கோடியாக உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், அணிகளுக்கு இடையில் டிரேடிங் பேச்சுவார்த்தையும் போய்கொண்டிருக்கிறது.
இன்னும் சில வாரங்களில் அணிகள் யார் யார் தக்கவைக்கிறார்கள்? எந்தெந்த வீரர்களை மினி ஏலத்திற்கு விடுவிக்கிறார்கள்? என்ற பட்டியல் உறுதியாகிவிடும். அதன்பின்னரே, எந்தெந்த அணிகள் யார் யாரை குறிவைக்கும் என்பதை துல்லியமாக சொல்ல முடியும். இருப்பினும் கேம்ரூன் கிரீன், பேர்ஸ்டோவ், மிட்செல் ஓவன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் பலரும் கடந்த முறை மெகா ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இவர்கள் மினி ஏலத்தில் வர இருக்கிறார்கள். இவர்களை எந்த அணி எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் இருக்கிறது.
IPL 2026 Mini Auction: மினி ஏலத்தில் வரும் பதும் நிஷங்க
அந்த வகையில், இலங்கை ஓபனர் பதும் நிஷங்க (Pathum Nissanka) தற்போது ஐபிஎல் அணிகளின் கவனத்தை குவித்துள்ளார். நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடர் இலங்கை அணிக்கு மோசமானதாக அமைந்தாலும், பதும் நிஷங்கவிற்கு சிறப்பானதாகவே அமைந்தது. 6 இன்னிங்ஸில் 261 ரன்களை குவித்திருந்தார், பதும் நிஷங்க. 74 டி20ஐ போட்டிகளில் 2,211 ரன்களையும், 144 டி20 போட்டிகளில் 3,933 ரன்களையும் குவித்துள்ளார்.
IPL 2026 Mini Auction: முட்டிமோதும் இந்த 3 அணிகள்
27 வயதான நிஷங்க தற்போது முரட்டு ஃபார்மில் இருக்கும் நிலையில், தரமான வெளிநாட்டு ஓபனர்களை தேடும் ஐபிஎல் அணிகள் வரும் மினி ஏலத்தில் இவர் மீது அதிகம் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில், பதும் நிஷங்கவை ஏலத்தில் எடுக்க இந்த 3 அணிகளுக்குள் தான் அதிகம் போட்டி இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
IPL 2026 Mini Auction: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கேகேஆர் அணியில் (KKR) இப்போது ஓபனிங் ஓட்டை பெரிதாக இருக்கிறது. குவின்டன் டி காக் மற்றும் குர்பாஸ் அகமது ஆகியோரில் ஒருவரை கேகேஆர் கழட்டிவிட நினைக்கும். சுனில் நரைன் அவர்களுக்கு ஓபனராக தொடர்ந்தால், பில் சால்ட் போன்ற அதிரடி வலது கை பேட்டரை கேகேஆர் குறிவைக்கும். எனவே கேகேஆர் அணிக்கு பதும் நிஷங்க சரியான தேர்வாக இருப்பார். கேகேஆர் அணியும் இவரை எடுக்க அதிகம் முயற்சிக்கும்.
IPL 2026 Mini Auction: டெல்லி கேப்பிடல்ஸ்
பிரேசர் மெக்கர்க், பாப் டூ பிளெசிஸ் என வெளிநாட்டு ஓபனர்கள் இருந்தாலும் தொடர்ச்சியான பங்களிப்பை அளிக்கக்கூடியவரை டெல்லி அணி (DC) நிச்சயம் தேடும். கேஎல் ராகுல் அடுத்த சீசனில் ஓபனராக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். எனவே பதும் நிஷங்க – ராகுல் ஜோடி அமைந்தால் டெல்லி அணிக்கு பெரிய பலமாக அமையும். அந்த வகையில், டெல்லி கேப்பிடல்ஸ் பதும் நிஷங்கவிற்கு குறிவைக்கும்.
IPL 2026 Mini Auction: சென்னை சூப்பர் கிங்ஸ்
சிஎஸ்கே அணியிலும் (CSK) ஓபனிங் பிரச்னை இருப்பது அனைவரும் அறிந்ததே. கான்வே அல்லது ரச்சின் ரவீந்திரா ஆகியோரில் ஒருவரை விடுவித்துவிட்டு சிஎஸ்கே பதும் நிஷங்கவிற்கு முழு வீச்சில் இறங்கும். எனவே, ஏலத்தில் சிஎஸ்கே உடன் கேகேஆர் மற்றும் டெல்லி அணியும் கடுமையாக போட்டியிடும். நிஷங்க எதிர்பார்த்ததை போல் பல கோடிகளை அள்ளுவாரா அல்லது கவனிக்கப்படாமல் போவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதுவரை அவர் ஐபிஎல் தொடரில் விளையாடியதே இல்லை.