பிரசாந்த் கிஷோருடன் சிராக் பாஸ்வான் கூட்டணி? – பிஹார் அரசியலில் பரபரப்பு!

பாட்னா: அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் சிராக் பாஸ்வான் – பிரசாந்த் கிஷோர் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் ‘அரசியலில் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’ என்று லோக் ஜனசக்தி கட்சி வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளன.

பிஹாரின் மறைந்த அரசியல் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், அம்மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். அவர் கடந்த 2020 பிஹார் தேர்தலில் தனித்து களமிறங்கி நிதிஷ் குமார் கட்சிக்கு பெரும் சேதாரத்தை உருவாக்கினார். அதேபோல சமீபத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது அவரின் கட்சி. எனவே லோக் ஜனசக்தி கட்சிக்கு இப்போது மவுசு அதிகரித்திருக்கிறது.

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கும், பிஹாரில் ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணிக்கும் இடையில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 40 இடங்களை பாஸ்வான் கட்சி பெற விரும்புகிறது. ஆனால், பாஜக 25 இடங்களை மட்டுமே ஒதுக்கத் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பாஸ்வான் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான், பாஸ்வான் பிரசாந்த் கிஷோர் தரப்புடனும் பேச்சுவார்த்தைக்கு தூது விட்டுள்ளாராம். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, பிஹாரில் தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு இல்லையெனிலும், கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என சொல்லப்படுகிறது. எனவே வலுவான கூட்டணியை அமைக்க பிரசாந்த் கிஷோர் முயற்சித்து வருகிறார்.

பிரசாந்த் கிஷோரின் முயற்சிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் விதமாக சமீபத்தில் பேசியுள்ள சிராக் பாஸ்வான், “நான் காய்கறிகளில் உப்பு போன்றவன். ஒவ்வொரு தொகுதியிலும் 20,000 முதல் 25,000 வாக்குகளை என்னால் பிரிக்க முடியும். எனவே கூட்டணியிலிருந்து வெளிநடப்பு செய்யும் விருப்பம் எனக்கு எப்போதும் உண்டு” என்று கூறினார்.

சிராக் பாஸ்வானுக்கும், நிதிஷ் குமாருக்கும் எப்போதும் ஆகாது. எனவே தொகுதி எண்ணிக்கையை காரணம் காட்டி பாஸ்வான் கடைசி நேரத்தில் வெளியேறும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், சிராக் பாஸ்வான் பிரதமர் மோடியின் பேச்சை மீறமாட்டார். எனவே தொகுதி பேரத்தை அதிகப்படுத்தவே இதுபோல பேசுகிறார் என்று பாஜக வட்டாரங்கள் பேசுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.