திருமாவளவன்: "என் கார் மோதவில்லை; அவதூறு பரப்புகிறார்கள்!" – சாலை தகராறுக்கு விளக்கம்

நேற்றைய தினம் சென்னை பார் கவுன்சில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற காரை மறித்து நபர் ஒருவர் தகராறில் ஈடுபட்ட காணொளி வைரலானது.

அந்தநபரின் வாகனத்தை திருமாவளவனின் கார் இடித்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் அந்த நபரை அடித்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்தநிலையில் கார் மோதவில்லை என்று கூறும் திருமாவளவன், நடந்த சம்பவத்தை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வம்பிழுக்கிற நோக்கில்…

அதில் அவர், “எனது வண்டிக்கு முன்னால் இருசக்கர வண்டியில் ஒரு இளைஞர் போய்க்கொண்டிருந்தார். அவர் நம்முடைய வண்டியை நன்றாக கவனித்து விட்டு தான் போகிறார். என் வண்டிக்கு பின்னால் எனக்கு வழக்கமாக வருகிற பாதுகாவலர்கள் காவல்துறையை சார்ந்தவர்கள் (எஸ்கார்ட் போலீஸ்) என் வண்டிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக போலீஸ் முன்னாள் செல்வார்கள் அப்போது சற்று முன்னதாக எனது வண்டி கிளம்பி விட்டதால் எனக்கு பின்னால் வந்தார்கள்.

அந்த இரு சக்கர வண்டியில் போன இளைஞர் வண்டியை நிறுத்திவிட்டு, எனது வண்டியை நோக்கி வேகமாக முறைத்துக் கொண்டே வந்தார். ஏதோ சத்தம் போட்டார், நான் “நமது வண்டியை நிறுத்த வேண்டாம் நீங்கள் வலது புறமாக ஏறி வண்டியை முன்னே எடுத்துச் செல்லுங்கள்” என்று சொன்னேன்.

அப்படி செல்ல முடியாதவாறு அவர் முன்னாலே வண்டியை நிறுத்திவிட்டு நம்முடைய வண்டியை நோக்கி கைகளை ஓங்கி அசைத்துக் கொண்டு வந்தார். இதை பார்த்த, என் பின்னால் வந்த எஸ்கார்ட் போலீஸ் அவர் ஏதோ வம்பு இழுக்கிறார் என்பதை உணர்ந்து காரில் இருந்து இறங்கி, வேகமாக என்பது காரை கடந்து சென்று அந்த இளைஞரை “தள்ளி செல்லுங்கள் ஒரு ஓரமாக நில்லுங்க” என்று கேட்டுக் கொண்டார்கள்.

அந்த வண்டியில் நான் அமர்ந்திருக்கிறேன் என்பதை பார்த்தும் கூட வேண்டுமென்றே வம்பு இழுக்கற மனநிலையில், கைகளை ஆட்டி அசைத்து பேசிக் கொண்டிருந்தார். நமது கட்சியின் முன்னணி தோழர்கள் அந்த இடத்தில் வந்து “கொஞ்சம் ஓரமாக தள்ளி நில்லுங்கள்” என்று கேட்டதும், அவர்களிடமும் அந்த நபர் முறைத்து பேசி இருக்கிறார். வேகமாக பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் தான் காவல்துறையினரும் இயக்கத் தோழர்களும் அவரை ‘முன்னே போங்க அல்லது இடது பக்கமாக நில்லுங்கள்’ என்று தள்ளுகிறபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அவர் எதிர்த்து எதிர்த்து பேச, நமது இயக்க தோழர்கள் ஒன்று-இரண்டு பேர் அவரை நோக்கி கையை ஓங்க, காவல்துறையினர் அவரை தமிழ்நாடு பார் கவுன்சில் கட்டடத்தை நோக்கி அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

இதுதான் நடந்தது. ஆனால் ஊடகங்கள் இதை ஊதிப் பெருக்கி ஏதோ நாம் திட்டமிட்டு அந்த இளைஞரை தாக்கியதை போல, அவரை அடித்து அவருக்கு மயக்கம் வந்து விட்டது என்றெல்லாம் அவதூறு செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் வண்டியின் மீது நம்முடைய கார் மோதவில்லை

அவர் என்னுடைய வண்டியை பார்த்து விட்டு தான் இடது புறமாக எனது வண்டிக்கு முன்னால் போகிறார், ஆனால் வேகமாக போகவில்லை. வேண்டுமென்று மிகத் தாமதப்படுத்தி வண்டியை ஓட்டிக்கொண்டு போகிறார். வண்டியை நிறுத்துகிறார். நம்முடைய வண்டி ஓட்டுநர் வழக்கம்போல ஹார்ன் அடிக்கிறார், பின்னால் இருக்கிற எஸ்கார்ட் போலீசாரும் சைரன் ஒலியை எழுப்புகிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி வண்டியை நமது வண்டிக்கு முன்னால் நிறுத்தி விட்டு வருகிறார். அவர் வண்டி நம்முடைய வண்டியின் மீது மோதவில்லை, அப்படி விபத்து என்று சொல்லத்தக்க வகையில் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சிலர் விபத்து என்கிறார்கள், சிலர் அவருடைய வண்டியில் நம்முடைய கார் மோதியது என்றார்கள். எல்லாம் அப்பட்டமான, தவறான தகவல்கள்.

திருமாவளவன்

எல்லாவற்றிலும் திரிபு வாதம்தான். பொய் செய்திகளை பரப்புவது, அவதூறுகளை பரப்புவது, வதந்திகளை பரப்புவது, குழப்பங்களை ஏற்படுத்துவது, சமூக பதற்றங்களை உருவாக்குவது… இதுதான் அவர்களின் அரசியல். அப்படித்தான் இதிலும் நடந்திருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்

பூக்கடைப் பகுதியைச் சேர்ந்த துணை ஆணையர், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “விடுதலைச் சிறுத்தைகள் சிலபேர் இங்கே சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள், அவர்களிடத்தில் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். உடனே நான் வழக்கறிஞர் ரஜினிகாந்த் அவர்களை தொடர்பு கொண்டு பேசி, “அந்த தம்பி எந்த நோக்கத்திலே வந்து பிரச்னை செய்தாலும் பரவாயில்லை அதை விட்டுவிடுங்கள். பிரச்னையை பெருசாக்க வேண்டாம். அவர் எந்த நோக்கத்தில் செய்தாலும், அது அவருக்கு உரியது. அதை நாம் பொருட்படுத்த வேண்டாம்” என்று சொல்ல, இங்கிருந்து நம்முடைய தோழர்கள் கலைந்து விட்டார்கள்.

ஆனால் இதை திட்டமிட்டு நமக்கு எதிராக பரப்புகிறார்கள். சில தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், வழக்கம் போல நம் மீது அவதூறு பரப்பக்கூடிய முக்கியமான தொலைக்காட்சி… அதுதான் அவர்களுக்கு வேலையே… அந்த தொலைக்காட்சிகள் யார் யார் என்று உங்களுக்கு தெரியும். இதை இப்படி ஊதிப் பெருக்கி திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இயக்கத்தினர் அதைப் பொருட்படுத்த வேண்டாம் அதை கடந்து செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.