பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிஹார் மாநிலத்துக்கான முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான். கூட்டணிக்குள் அனைத்தும் சுமுகமாக உள்ளது என பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தனும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், “எதிர்வரும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைத்தும் சுமுகமாக உள்ளது. தொகுதிப் பங்கீட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இறுதி சூத்திரம் விரைவில் இறுதி செய்யப்படும். நீங்கள் (பத்திரிகையாளர்கள்) அதை அறிந்து கொள்வீர்கள்” என தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கடுமையாக விமர்சித்த கிரிராஜ் சிங், அது ஒரு பிளவுபட்ட வீடு என வர்ணித்தார். “தேஜஸ்வி யாதவ் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் மகாகட்பந்தனின் முதல்வர் வேட்பாளராக அல்ல என்றும் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பை அடுத்து லாலு பிரசாத் யாதவ் கவலையும் அச்சமும் அடைந்துள்ளார்.
மகாகட்பந்தனின் தலைமை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கை, தலைமை, நோக்கம் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், எந்த அதிருப்தியும் இல்லை.” என்று கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.