திருப்பதி: தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் மோகன்பாபு. இவருக்கு சொந்தமாக திருப்பதி அருகே ரங்கம்பேட்டை எனும் இடத்தில் மோகன்பாபு பல்கலைக்கழகம் (எம்பியு) உள்ளது.
இங்கு உயர்கல்வி ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் 3 அதிகாரிகள் குழு கடந்த மாதம் 17-ம் தேதி ஆய்வு செய்தது. மேலும் மாணவர்கள், பெற்றோர்களிடம் விசாரணையை நடத்தியது.
இதையடுத்து மோகன்பாபு பல்கலைக்கழகத்திற்கு அதிகாரிகள் குழு ரூ.15 லட்சம் அபராதம் விதித்தது. மேலும் மாணவர்களிடம் இருந்து கூடுதலாக வசூலித்த ரூ.26 கோடியே 27 லட்சத்து 52,872 பணத்தை 15 நாட்களுக்கும் திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
அவ்வாறு வழங்கப்படவில்லை எனில், மோகன்பாபு பல்கலைக்கழகத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர மாநில அரசுக்கும், யுஜிசி, ஏஐசிடிஇ, ஐசிஏஆர் உள்ளிட்ட தேசிய உயர்கல்வி அமைப்புகளுக்கும் பரிந்துரை செய்துள்ளது.