கொல்கத்தா: நாட்டின் செயல் பிரதமரைப் போல அமித் ஷா நடந்து கொள்வதாகவும், அவரிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு வங்காளத்தில் இருந்து திரும்பிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பாஜக தலைவர் ஒருவர் (அமித் ஷா), வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பெயர்களை நீக்குவோம் என்பதைச் சொல்வதற்காக மேற்கு வங்கம் வந்தார். மேற்கு வங்கம் தற்போது இயற்கை பேரழிவுகள், கனமழை போன்றவற்றால் தத்தளித்து வருகிறது. 15 நாட்களுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடிக்க முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில், புதிய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியுமா? இந்திய தேர்தல் ஆணையம், பாஜகவின் உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா அல்லது பொதுமக்களின் உரிமைகளின் நலனுக்காக செயல்பட வேண்டுமா? இவை எல்லாம் அமித் ஷாவின் விளையாட்டு. அவர் இந்த நாட்டின் செயல் பிரதமரைப் போல நடந்துகொள்கிறார். பிரதமர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். எனினும், இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன்.
அமித் ஷாவை எப்போதும் நம்ப வேண்டாம் என பிரதமரை நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நாள் அவர், உங்களுக்கு எதிராக மீர் ஜாபரைப் போல மாறுவார். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. எனது வாழ்க்கையில் பல (மத்திய) அரசாங்கங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு திமிர்பிடித்த, சர்வாதிகார ஆட்சியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. பாஜக நாட்டை அழிக்கிறது” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மம்தா குறிப்பிடும் மீர் ஜாபர் யார்? – 18-ம் நூற்றாண்டில் வங்கத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர் மீர் ஜாபர். பிளாசி போரில் நவாப் சிராஜ் உத் தவுலாவைக் காட்டிக் கொடுத்து பின்னர் ஆங்கிலேயர்களின் உதவியுடன் மன்னரானவர் மீர் ஜாபர் என்பது நினைவுகூரத்தக்கது.