சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி முதல்வர் கோப்பைக்கான ஜோதியை ஏற்றிவைத்து, கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, விளையாட்டு வீரர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வர் கோப்பைக்கான போட்டிகளை திருவிழாபோல சர்வதேச தரத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறோம். 2023-ல் நடந்த போட்டிகளில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து, தற்போது 16.28 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் விளையாட்டை மக்கள் இயக்கமாக கொண்டாடி வருவதற்கு, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளும் முக்கியக் காரணமாகும்.
திறமையானவர்கள் நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும், மலைப் பகுதிகளிலும்கூட இருப்பார்கள். அவர்களைக் கண்டறிந்து, திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது தமிழக அரசின் கடமை. அதை, முதல்வர் கோப்பை மூலமாக தமிழக அரசு செய்து வருகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.37 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள் பெறும் சான்றிதழ்கள் 3.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, விளையாட்டுத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் அசோக் சிகாமணி, உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.