அக்.14-ல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழகத்​தில் அக்​.14-ம் தேதி தொடங்​கும் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில், காசா மீது இஸ்​ரேல் நடத்​தும் தாக்​குதலை கண்​டித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் தாக்​குதலை கண்​டித்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் சென்​னை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் கண்​மூடித்​தன​மான தாக்​குதல் உலகத்​தையே உலுக்​கிக் கொண்​டிருக்​கிறது. மத்​திய பாஜக அரசு, இஸ்​ரேல் மற்​றும் பிற தொடர்​புடைய நாடு​களுக்கு அழுத்​தம் கொடுத்​து, இந்​தத் தாக்​குதல்​களை உடனடி​யாக நிறுத்​த​வும், அமை​தியை நிலை​நாட்​ட​வும் நடவடிக்கை எடுத்​தாக வேண்​டும்.

வரும், அக்​.14-ம் தேதி தொடங்​கும் தமிழக சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் காசா​வில் இஸ்​ரேல் நடத்​தும் தாக்​குதலைக் கண்டித்தும், அங்கு உடனடி​யாக போர் நிறுத்​தம் தேவை என்​பதை வலி​யுறுத்​தி​யும், அதற்​கான முயற்​சிகளை இந்​திய அரசு எடுக்க வேண்​டும் எனக் கோரி​யும் தீர்​மானம் கொண்டு வரப்​படும்.

இந்​தத் தீர்​மானம் தமிழக மக்​களின் உணர்​வு​களைப் பிர​திபலிப்​ப​தாக இருக்​கும். அரசி​யல் வேறு​பாடு​களைக் கடந்​து, அனைத்​துக் கட்​சி​யினரும் இந்​தத் தீர்​மானத்தை ஆதரிப்​பார்​கள் என்று நான் முழு​மை​யாக நம்​பு​கிறேன். இக்​கூட்​டம் மூல​மாக, காசா மீதான இஸ்​ரேல் தாக்​குதலுக்கு என்​னுடைய கடுமை​யான கண்​டனத்தை தெரி​வித்​துக்​கொள்​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: காசா​வில் அமைதி நில​வுவதற்​கான எல்லா வித​மான முயற்​சிகளை​யும் உலக சமூகத்​தோடு சேர்ந்து இந்​தி​யா​வில் இருக்​கும் நாங்​களும் எடுக்​கிறோம் என்ற நம்​பிக்​கையை அம்​மக்​களுக்கு கொடுத்​திருக்​கிறோம். நமது ஒரே நோக்​கம் அங்​குள்ள குழந்​தைகளின் முகத்​தி​லும் மீண்​டும் புன்​னகை மலர வேண்​டும் என்பதே.

திரா​விடர் கழக தலை​வர் கி.வீரமணி: இஸ்​ரேலுக்கு எதி​ராக தமிழக சட்​டப்​பேரவை தீர்​மானம் நிறைவேற உள்​ளது. இது ஒரு மாநில சட்​டப்​பேரவை தானே என்று நினைக்க வேண்​டாம். இந்த மண் தான் இந்​தி​யா​வுக்கே வழி​காட்​டக்​கூடிய மண்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: பாலஸ்​தீனம் பக்​கம் இந்​தியா இருக்க வேண்​டும் என்​பது தான் மகாத்மா காந்​தி​யின் கனவு. மத்​திய அரசின் ஆதரவு குரல் இருக்​கிறதோ, இல்​லையோ தமிழகத்​தில் இருந்து குரல் ஐ.நா. செல்​லும் வரை போராடு​வோம்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: இரு தேசங்​களுக்கு இடையி​லான விவ​காரங்​களில் தலை​யிடக் கூடாது. அதே​நேரத்​தில், அந்த நாட்​டின் விடு​தலையை மறுக்​கக்​கூ​டாது. அதனால் உலகின் தலைசிறந்த நாடான இந்​தி​யா​வின் மக்​களவை​யிலும் இஸ்​ரேலுக்கு எதி​ராக தீர்​மானம் நிறைவேற்ற வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: பாலஸ்​தீனத்தை இந்​திய அரசு அங்​கீகரிக்க வேண்​டும். மக்​களவை​யிலும் தீர்​மானம் நிறைவேற்​றப்பட‌ வேண்​டும்.

இதே​போல் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு, மனிதநேய மக்​கள் கட்சி பொதுச்​செய​லா​ளர் ஜவாஹிருல்​லா, தமிழக வாழ்​வுரிமை கட்​சித் தலை​வர் தி.வேல்​முரு​கன், மேயர் ஆர்​.பிரி​யா, மதி​முக பொருளாளர் செந்​தில் அதிபன், மஜக தலை​வர் தமி​முன் அன்​சா​ரி, கொமதேக துணை பொதுச்​செய​லா​ளர் கே.நித்​தி​யானந்​தன், ஐயூஎம்​எல் பொதுச்​செய​லா​ளர் முகமது அபுபக்​கர், மார்க்​சிஸ்ட் கட்​டுப்​பாட்​டுக்​குழுத் தலை​வர் ஜி.​ராமகிருஷ்ணன், தலை​மைக்​குழு உறுப்​பினர்​கள் கே.​பால​கிருஷ்ணன், உ.வாசுகி சிபிஐ(எம்​எல்) மத்​தி​யக்​குழு உறுப்​பினர்​ பாலசுப்​பிரமணி​யன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.