அயோத்தி: வட தென்னிந்திய கலாச்சார ஒற்றுமைக்கு புதிய அடையாளமாக அயோத்தியில் தென்னிந்தியாவைச் சேர்ந்த மூன்று துறவி – இசை மேதைகளின் சிலைகள் திறந்துவைக்கப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜ சுவாமிகள், அருணாசல கவி மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த புரந்தரதாசர் ஆகியோர் இசைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கவும், வட மற்றும் தென்னிந்திய கலாச்சார சங்கமத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அயோத்தியில் அவர்களுக்கு சிலையை நிறுவ உத்தர பிரதேச அரசு முடிவெடுத்தது.
அதன்படி, அயோத்தியில் தேடி பஜாரில் உள்ள பிரஹஸ்பதி குண்ட் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மூன்று தென்னிந்திய இசை மேதைகளின் சிலைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நேற்று திறந்துவைத்தனர்.
தென்னிந்திய சடங்குகள் நிறைந்த இந்த விழாவில், சீதாராமனின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.இசை மேதைகளின் சிலை திறப்பு குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “பிரஹஸ்பதி குண்ட் ஒரு வரலாற்றுத் தலம் மட்டுமல்ல, வடக்கு மற்றும் தென்னிந்தியாவின் பக்தி மரபுகளை ஒன்றிணைக்கும் கலாச்சார நல்லிணக்கத்தின் சின்னமாகும்” என்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: அயோத்தி நம்பிக்கையின் மையம் மட்டுமல்ல. இந்தியாவின் கலாச்சார ஆன்மாவின் சின்னமும் கூட. இந்திய பாரம்பரிய இசை மற்றும் பக்தி மரபுகளை உலக அரங்கில் நிலை நிறுத்திய பெருமை தியாகராஜ சுவாமிகள், அருணாச்சல கவி, புரந்தரதாசர் ஆகிய மூன்று இசை மேதைகளையே சாரும். அவர்களின் கவிதைகள் மற்றும் இசையமைப்புகள் சமூகத்தை அன்பு, பக்தி மற்றும் ஒற்றுமையை ஒரே நூலிழையில் பின்னிப்பிணைத்தன.
அயோத்திக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான கலாச்சார உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது, இன்று, இந்த துறவிகளின் சிலைகள் திறப்பு விழாவின் மூலம், இந்தியாவின் வடக்கு-தெற்கு பாரம்பரியம் ஒரே நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.