புதுடெல்லி: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, முதன் முறையாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி இன்று டெல்லிக்கு வந்தடைந்தார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் ஆப்கானிஸ்தானை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியது. அதன்பின்னர் தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்.
இந்தியாவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள முத்தாகி வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். மேலும், அவர் தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லவுள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘புது டெல்லிக்கு வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமிர் கான் முத்தாகிக்கு அன்பான வரவேற்பு. இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து அவருடன் கலந்துரையாட நாங்கள் ஆவலாக உள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கடந்த மாதம் புதுடெல்லிக்கு வருகை தர திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது. இதனால் அவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விலக்கு பெற வேண்டும். அப்போது அவருக்கு பயணத் தடைக்கான விலக்கு கிடைக்காததால், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அக்டோபர் 9 முதல் 16 வரை முத்தாகி இந்தியாவுக்கு பயணம் செய்ய செப்டம்பர் 30 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.