கவுகாத்தி,
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதன் கலப்பு அணிகள் பிரிவில் பங்கேற்றுள்ள 36 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தை சந்தித்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 45-37, 45-34 என்ற நேர்செட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்ததுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. இதேபோல் மற்ற பிரிவுகளில் முதலிடத்தை பெற்ற தென்கொரியா, சீன தைபே, இந்தோனேசியா, மலேசியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய அணிகளும் காலிறுதிக்குள் நுழைந்தன. இன்று காலிறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதன் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரியாவை எதிர்கொள்கிறது.