சென்னை: எழும்பூரில் கொலை திட்டத்துடன் பதுங்கிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர். அவரது நண்பரும் சிறையில் அடைக்கப்பட்டார். எழும்பூர் பகுதியில் கொலை செய்யும் நோக்கத்துடன் 2 பேர் கத்தியுடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்றும் எழும்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வினோத் ராஜ் ஆகியோர் எழும்பூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த விமல்ராஜ் என்ற கபாலி, பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் இருவரும் எதிர் தரப்பை சேர்ந்த ஒருவரை கொலை செய்யும் நோக்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
பிரகாஷ் மீது ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, விழிப்புடன் செயல்பட்டு கொலை சதியை தடுத்து நிறுத்திய இரு போலீஸாரையும் காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்துப் பாராட்டினார்.