பாட்னா: பிஹார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையின் (19) பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் டெல்லி, கொல்கத்தா நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ரோட்டாஸ் மாவட்டம் முதல் அவுரங்காபாத் வரையிலான 65 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. சில கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே பல மணி நேரம் ஆகிறது. இதனால் பல வாகனங்கள் கடந்த 4 நாட்களாக நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் லாரிகளில் உள்ள அழுகக்கூடிய பொருட்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ், அத்தியாவசிய சேவைகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர் பிரவீன் சிங் கூறும்போது, “30 மணி நேரத்தில் 7 கிலோமீட்டர் தூரத்தை மட்டுமே கடந்துள்ளோம். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என்றார்.