பெலகாவி,
கர்நாடக மாநிலம் பெலகாவி புறநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மச்சே பகுதியில் வசித்து வருபவர் அனுமந்தபாட்டீல் (வயது 57). இவரது மனைவி வைஷாலி (53). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. ஒரு மகளுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.
இந்த நிலையில் அனுமந்தபாட்டீலின் நடத்தையில் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது வேறொரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கருதி வைஷாலி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுபோல் சம்பவத்தன்று மதியம் வைஷாலி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார்.
அந்த சமயத்திலும் வைஷாலிக்கும், அனுமந்த பாட்டீலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வைஷாலி கூறியதாக தெரிகிறது. இதற்கு அனுமந்தபாட்டீல் மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த வைஷாலி சமையல் செய்ய அடுப்பில் வானெலியில் வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயை கணவர் என்று கூட பாராமல் அனுமந்தபாட்டீல் மீது ஊற்றினார். இதில் அவரது முகம், மார்பு, வயிறு, கைகள், தொடையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அனுமந்த பாட்டீலை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் வைஷாலி மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மீது வைஷாலி கொதிக்கும் எண்ணெயை ஊற்றியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.