மைதானத்தை திறந்து வைத்த தோனி: மதுரையில் வேலம்மாள் குழுமத்தின் சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வந்த நிலையில், அதன் திறப்பு விழா இன்று (அக்டோபர் 09) வெகு விமரிசையாக நடைபெற்றது. கிரிக்கெட் ஸ்டேடியத்தை பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் மத்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த ஸ்டேடியம் 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
கடந்த 2023ஆம் ஆண்டு மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமம் சார்பாக புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தமாக 11.25 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆடுகளங்கள், இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், மருத்துவமனை வசதி உள்ளிட்டவையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் இருக்கைகள்
மேலும் 20 ஆயிரம் இருக்கைகள், 500 கார்களை நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெங்களூர் மைதானத்தை போல் மழை பெய்தாலும் விரைவாக மீண்டும் போட்டியை தொடங்கும் வகையில் சிறப்பான வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சுற்றி 5 அடியளவில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து இந்த மைதானத்தின் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 7,500 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதேபோல் மைதானத்தின் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 2வது பெரிய மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குப் பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய ஸ்டேடியமாக இது அமைந்திருக்கிறது. இனி மதுரையில் டிஎன்பிஎல், ரஞ்சி டிராபு, புச்சி பாபு கிரிக்கெட் தொடர் ஆகியவை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 நிமிடங்களில் மைதானத்திற்கு வர முடியும். அதேபோல் வீரர்கள் தங்குவதற்கு அருகிலேயே பிரம்மாண்ட ஹோட்டலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காலதாமதமின்றி மைதானத்திற்கு வர ஏதுவாக உள்ளது. ஆக மொத்தத்தில், வேலம்மாள் குழுமத்தின் சார்பில் மதுரையில் அமைந்துள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் உலகரங்கில் பேசப்படும்.
About the Author
R Balaji