புதுடெல்லி: நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கல்வி முறை இந்தியாவுக்குத் தேவை என்றும், கல்வி சிலருக்கு மட்டுமான சலுகையாக மாறக்கூடாது என்றும், அது சுதந்திரத்தின் அடித்தளம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெரு நாட்டின் போன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் சிலி பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களுடன் உரையாடியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி உரையாடிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி, “கல்வியைப் பொறுத்தவரை, அது ஆர்வத்துடனும், அரசியல் அல்லது சமூக ரீதியான எந்த பயமோ அல்லது தடைகளோ இல்லாமல் வெளிப்படையாக சிந்திக்கவும், கேள்விகள் கேட்கவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். கல்வி ஒரு சிலருக்கு ஒரு சலுகையாக மாறக்கூடாது, ஏனெனில் அது சுதந்திரத்தின் அடித்தளமாகும்.
இந்தியாவுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும், விமர்சன சிந்தனையை ஊக்குவிக்கும் மற்றும் நமது நாட்டின் வளமான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு கல்வி முறை தேவை. ஜனநாயக அமைப்பில் செழித்து வளரும் மாற்று உற்பத்தி முறையை இந்தியா உருவாக்க வேண்டும். எனவே, பெரு அல்லது அமெரிக்காவுடனான உறவு முன்னோக்கிச் செல்ல வேண்டும் ” என்று தெரிவித்தார்
கல்வி, ஜனநாயகம், புவிசார் அரசியல் மற்றும் இன்றைய பன்முக உலகில் இந்தியா எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதில் இந்த உரையாடல் கவனம் செலுத்தியது என்று அந்த பதிவில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி கொலம்பியா, பிரேசில், பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளுக்கு ஒரு வார கால பயணத்தை மேற்கொண்டுள்ளார்.